தி மகாபாரதம் அப்டேட்: கர்ணனாக நடிக்க நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை

’ரண்டாமூழம்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவாகவுள்ள மகாபாரதக் கதையில் கர்ணனாக நடிக்க நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

மகாபாரதத்தை இன்றைய காலகட்ட நவீன தொழில்நுட்பத்தில், அடுத்த தலைமுறையும் ரசிக்கும் வகையில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 'ரண்டாமூழம்' என்ற பெயரில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய நாவலை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது. இந்த நாவல், பீமனின் பார்வையிலிருந்து மகாபாரதக் கதையை கூறுவதாகும்.

இப்படத்தை சுமார் 1000 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ரகுராம் ஷெட்டி. 'தி மகாபாரதம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2020-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் படம், இந்தியாவின் மற்ற மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படத்தை பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ளார். பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள எம்.டி.வாசு தேவன் நாயர், திரைக்கதை எழுதி வருகிறார். இதில் பீமனாக நடிக்க மோகன்லால் ஒப்பந்தமாகியுள்ளார்.

கர்ணனாக நடிக்க நாகார்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. இது குறித்து சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனா, "எம்.டி.வாசுதேவன் நாயர் தன்னை கர்ணன் வேடத்தில் நடிக்க அணுகினார். அக்கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் தருவாயில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினேன். முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்தான் என கூறியுள்ளார். இப்படம் முழுமையான வடிவத்துக்கு வந்தவுடன் தான், அனைத்து விவரங்களும் தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலிருந்தும் முன்னணி நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது படக்குழு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE