ரூ.45 கோடிக்கு விலை போனது பாகுபலி 2-ன் தமிழக உரிமை!

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தின் தமிழக உரிமையை ரூ.45 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள்.

'பாகுபலி' படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து 'பாகுபலி 2'வுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி 2'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி 2' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'பாகுபலி' படத்தின் தமிழக உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. தற்போது 'பாகுபலி 2' படத்தின் தமிழக உரிமையை ரூ.45 கோடிக்கு விலை போயிருக்கிறது. யார் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது.

2017ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு 'பாகுபலி 2' வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE