கன்னட சினிமா தினத்தில் என்னை அறிந்தால் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

மார்ச் 3-ம் தேதி கன்னட சினிமா தினத்தை முன்னிட்டு 'என்னை அறிந்தால்' தமிழ் படத்தின் கன்னட டப்பிங் வெளியாகவுள்ளது.

மார்ச் 3-ம் தேதி கன்னட சினிமா தினம் கர்நாடகாவில் கொண்டாடப்படவுள்ளது. 1934-ம் ஆண்டு இதே தினத்தில் தான் முதல் கன்னட சினிமா வெளியானது.

சினிமா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழில் வெற்றி பெற்ற அஜித்தின் 'என்னை அறிந்தால்' படம் கன்னட மொழிமாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மற்ற மொழிகளில் இருந்து படங்கள் டப்பிங் செய்யப்படுவது கன்னட சினிமாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே 'என்னை அறிந்தால்' படம் டப்பிங் செய்யப்படுவது சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. 'சத்யதேவ் ஐபிஎஸ்' என கன்னட டப்பிங் பதிப்புக்குப் பெயரிடப்பட்டுள்ளது

"படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் பெங்களூரு உட்படகுறைந்தது 60 திரையரங்குகளிலாவது படம் வெளியிடப்படும். 1.87 லட்சம் பார்வையாளர்கள் யூடியூப்பில் இதைப் பார்த்துள்ளனர். பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. பண்பலைகள் அடுத்த சில நாட்களில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்" என கன்னட பிலிம் சேம்பர் ஆஃப் காமெர்சின் பொது செயலாளரும், 'என்னை அறிந்தால்' படத்தை தெலுங்கில் வெளியிடுபவருமான ஜி. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்

நீண்ட நாட்களாக நடந்து வரும் ஒரு வழக்கின் தீர்ப்பு கன்னட சினிமா துறைக்கு சாதகமாக வராததே தற்போது கன்னடத்தில் டப்பிங் படம் வெளியாகக் காரணம். 2014-ம் ஆண்டு இந்திய போட்டி ஆணையம் டப்பிங் படங்களை அனுமதிக்க வழிவகுத்தது.

இதனால், இந்தி உட்பட மற்ற மொழிகளிலிருந்து படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்படும் என தெரிகிறது. 'பாகுபலி 2' வெளியாகும் போதே கன்னடத்தில் டப்பிங் செய்யப்படும் என்றும், அஜித்தின் 'ஆரம்பம்' படமும் கன்னடத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE