கத்தி தெலுங்கு ரீமேக் தலைப்பு கைதி நம்பர் 150

நடிகர் சிரஞ்சீவியின் 150-வது படத்துக்கு 'கைதி நம்பர் 150' என்று பெயரிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.வினாயக் இயக்குகிறார். விஜய் - முருகதாஸ் கூட்டணியில் தமிழி ஹிட்டான கத்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிரஞ்சீவி கடைசியாக 2007-ஆம் ஆண்டு சங்கர்தாதா ஜிந்தாபாத் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். பிறகு அரசியலில் தீவிரமான சிரஞ்சீவி சில கௌரவ வேடங்களில் நடித்திருந்தாலும் நாயகனாக நடிக்கவில்லை. கத்தி திரைப்படத்தின் ரீமேக்கில் தெலுங்கின் பல இளம் முன்னணி நடிகர்கள் நடிக்கவிருப்பதாக செய்திகள் உலவி வந்த நிலையில் சிரஞ்சிவியின் 150-வது படமாக அது இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தலைப்பு வைக்கப்படாமல் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22-ஆம் தேதி தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த கைதி (1983) மற்றும் கைதி நம்பர் 786 (1988) ஆகிய படங்கள் ஹிட்டடித்ததால் அந்த ராசியை தக்க வைக்க கத்தி ரீமேக் பதிப்புக்கும் கைதி நம்பர் 150 என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

கைதி நம்பர் 150 இயக்குநர் விவி வினாயக், இதே போல தமிழில் ஹிட்டான ரமணா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை 2003-ம் வருடம் சிரஞ்சீவியை நாயகனாக வைத்து இயக்கினார். அந்தப் படமும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

2017-ஆம் ஆண்டு பொங்கலுக்கு கைதி நம்பர் 150 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE