பாகுபலி 2வில் குறைவான காட்சிகள் குறித்த சர்ச்சை: தமன்னா விளக்கம்

By ஸ்கிரீனன்

'பாகுபலி 2'வில் குறைவான காட்சிகளிலே தமன்னா இடம்பெற்றிருப்பது குறித்து எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'.

'பாகுபலி 2' படத்தில் தமன்னா காட்சிகளை நீக்கிவிட்டார் ராஜமெளலி. இதனால், அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். மேலும், சமூக வலைதளத்தில் பலரும் 'பாகுபலி 2' படத்தில் விளம்பரதாரர்கள் பெயர்கள் இடம்பெறும் நேரத்தைவிட, தமன்னா வரும் நேரம் குறைவு என்று கருத்துகளை வெளியிட்டுவந்தார்கள்.

இச்சர்ச்சை குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "யாரோ வெட்டியாயிருப்பவர்களின் கற்பனை இது. என்னை அவந்திகா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்காக ராஜமெளலிக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். இது ஆதாரமற்ற செய்தி, படத்தில் வேலை செய்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ராஜமெளலி மீது எனக்கு என்றுமே பெரிய மரியாதை உள்ளது. இந்த சரித்திரப் படத்தில் பங்கேற்றதில் எனக்கு பெருமை. ஒரு நடிகையாக என் வாழ்வை இந்தப் படம் மாற்றிவிட்டது. திரைத்துறையில் இருக்கும் மற்றவர்களும் தொட வேண்டிய உச்சத்தை இன்னும் உயர்த்தியுள்ளது." என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

தமன்னா அளித்துள்ள இப்பதிலால், 'பாகுபலி 2' குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE