ரஜினியுடன் ஒப்பிட்ட ராம் கோபால் வர்மா: சுதீப் மறுப்பு

'கோட்டிபாபா 2' படத்தைப் பார்த்து ரஜினியுடன் ஒப்பீடு செய்த ராம் கோபால் வர்மாவுக்கு, மறுப்பு தெரிவித்துள்ளார் சுதீப்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சுதீப், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'முடிஞ்சா இவன பிடி'. கன்னடத்தில் இதே படம் 'கோட்டிபாபா 2' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த ராம் கோபால் வர்மா "இப்போதுதான் 'கோட்டிகோபா 2' பார்த்தேன். உங்களது பெயரை கிச்சா சுதீப்பில் இருந்து ரஜினி சுதீப் என மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் ரஜினி ஒரே மாதிரியான பாத்திரங்களில் தான் நடிக்க முடியும். ஆனால் உங்களது பன்முகத்தன்மையை 'ஆட்டோகிராப்', 'ஈகா' மற்றும் 'கோட்டிகோபா 2' என நிரூபித்திருக்கிறீர்கள்.

'கோட்டிகோபா 2'வில் உங்களது நடிப்பைப் பார்க்கும் போது, விஷ்ணுவர்தன் கத்துக்குட்டிப் போல் தெரிகிறார். இதனை விஷ்ணுவர்தன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களும் கத்துக்குட்டிதான். தூங்கியபடி கூட உங்களால் 'ரோபோ' மாதிரியான படத்தை பண்ணமுடியும். ஆனால் ரஜினிகாந்த் 'ஈகா' மாதிரியான படத்தை கனவிலும் செய்ய முடியாது" என்று ட்விட்டர் தளத்தில் கருத்துகளைத் தெரிவித்தார்.

ராம் கோபால் வர்மாவுக்கு பதிலளித்துள்ள சுதீப், "உங்களது பாராட்டுகளுக்கு நன்றி. விஷ்ணுவர்தன் சார் மற்றும் ரஜினி சார் ஆகியோரின் பக்கத்தில் கூட என்னால் வர இயலாது மற்றும் அவர்களைப் போன்ற பெரும் கலைஞர்களோடு என்னை ஒப்பிடவும் முடியாது" என்று தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE