13 வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் விஜயசாந்தி

By ஸ்கிரீனன்

மகேஷ் பாபு நடிக்கவுள்ள 'சரிலேரு நீக்கெவரு' படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜயசாந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தன் தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பை நேற்று (மே 31) அறிவித்தார் மகேஷ் பாபு. அவரின் 26-வது படமான அதற்கு, ‘சரிலேரு நீக்கெவரு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘உனக்கு நிகரானவர்கள் யாருமில்லை’ என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்தப் படத்தை, அனில் ரவிபுடி இயக்குகிறார். அனில் சுங்கரா, தில் ராஜு மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் (2020) சங்கராந்தி பண்டிகைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் மூலம், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்குத் திரும்புகிறார் நடிகை விஜயசாந்தி. இந்தப் படத்தின் தொடக்க விழாவில் விஜயசாந்தியால் கலந்துகொள்ள முடியாமல் போனாலும், ஒரு சிறிய குறிப்பை அனுப்பியுள்ளார். அதை, விழாவில் இயக்குநர் படித்துக் காட்டினார்.

அதில், "தெலுங்கில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவுடன் 'ஹிலாடி கிருஷ்ணுடு'தான் எனது முதல் படம். அங்கு ஆரம்பித்து 180 படங்கள்வரை நான் நடித்துவிட்டேன். அரசியலுக்காக படங்களில் நடிப்பதிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். இப்போது கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபுவின் படத்தில் மீண்டும் நடிக்கத் தொடருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE