எந்தப் பதவிக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை: நடிகர் மோகன் பாபு

எந்தப் பதவிக்காகவும் பரிந்துரைக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை என நடிகர் மோகன் பாபு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார். 151 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, தனிப் பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியமைத்துள்ளார்.

அவருடைய தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில், திருப்பதி தேவஸ்தான தலைவராக மோகன் பாபு நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மோகன் பாபு.

“தேவஸ்தானம் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதாக செய்திகள் பார்த்தேன். தொலைபேசி அழைப்புகளும் வந்தன. ஜெகன் மோகனை முதல்வராகப் பார்ப்பதுதான் என் லட்சியம். அதற்காக வேலைசெய்து, எனது பங்கை ஆற்றிவிட்டேன்.

ஜெகன், மக்களின் முதல்வராக இருப்பார் என்ற நம்பிக்கையில்தான் மீண்டும் அரசியலுக்கு வந்தேன், எந்தப் பதவிக்காகவும் பரிந்துரைக்காகவும் அல்ல” எனத் தெரிவித்துள்ளார் மோகன் பாபு.

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மோகன் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE