திரைப் பார்வை: கும்பளங்கி நைட்ஸ் - கற்றாழையில் மலர்ந்த மஞ்சள்பூ

By டோட்டோ

 

“என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்”. இது ஒரு மேல்-மத்திய வர்க்க ஆணின் விருப்பமாக வெளிப்பட்ட, கவிஞர் தாமரையின் பாடல் வரிகள். ஆனால், இதைப் போல் தன் வசிப்பிடத்திற்கோ அல்லது தான் வாழும் பகுதிக்கோ அழைக்க முடியாமல், தன் ஊர் பெயரைச் சொல்லத் தயங்கும், தன் குடும்பத்தாரைப் பற்றி மறைக்க முயலும் மனிதர்கள் எத்தனையோ பேர். 'மசான்' திரைப்படத்தில் பிணங்கள் எரிக்கும் குடும்பத்தொழிலை காதலியிடம் மறைக்கும் தீபக்  உதாரணம். இன்னொரு பக்கம்,  கண்மறைக்கும் கற்பிதங்களைக் காட்டி மற்றவர்களை வாழவிடாமல் தடுக்கும், தந்தை மரபாட்சியின் வழியில் செய்யும் ஆணாதிக்கக் கொடுமை செய்யும் மனிதர்கள் பலர். “நான் ஆண் – நெடில்” என்னும் போலி கர்வத்தை சொல்லும் 'இறைவி' அருள்தாஸ் போல. இப்படி எல்லா காலகட்டங்களிலும், மலையாளத் திரையில் காட்டப்பட்ட சாதாரண மாந்தர்களைச் சுற்றி பின்னப்பட்ட ஓர் அசாதாரணமான திரைப்படம் தான் 'கும்பளங்கி நைட்ஸ்'.

கதை

கொச்சிக்கு அருகே கும்பளங்கி எனப்படும் சின்னதொரு மீன்பிடி, சுற்றுலா கிராமத்தின் ஒதுக்குப்புறமான தீவில், பெற்றவர்கள் இல்லாமல், ஒரு சிக்கலான உறவுள்ள, பொருந்திப்போகாத, வேலைக்குப் போகாத நான்கு  சகோதரர்கள், முற்றுப்பெறாத ஒரு வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் வசிக்கவில்லை. சராசரி வாழ்வின் இலக்கணத்தில் சேராமல், கட்டற்ற ஆனால் மகிழ்ச்சியில்லாத சுதந்திரத்தோடு இருக்கும்  பெண்களில்லாத இவர்களின் வாழ்வில் வரும் வெவ்வேறு பெண்களும், அவர்களால் ஏற்படும் ரசவாதமும் இதை ஒத்துக் கொள்ளாத, அதே ஊரில் வாழும் இன்னொரு  ஆணாதிக்க மனிதனின் குறுக்கீடும் தான் கதை.

பார்வை

ஒரு திரைப்படத்திற்கு கதாநாயகன், கதாநாயகி போன்ற பழகிப்போன விஷயங்களைக் கட்டுடைத்து எழுதப்பட்ட அபாரமான திரைக்கதையும், அதை எடுத்த விதமும் தான் இந்தப் படத்தை, சமகாலத்தில் புதிய அலை இயக்குநர்களால் சூழப்பட்ட மலையாளத் திரையுலகின் மற்றுமொரு மைல் கல்லாக்குகிறது. தன்னுடைய முதல் திரைப்படம் என்பதால், தானே கதை எழுதுவேன் என்று அடம் பிடிக்காமல் இன்னொருவரின் கதையை இயக்கிய மது சி.நாராயணனுக்குப் பாராட்டுகள். இவர் ஆஷிக் அபு, திலீஷ் போத்தனிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். ஒரு பூச்சரம் தொடுப்பது போல நிதானமாக ஆனால் ஆழமாக பாத்திரங்களையும், சம்பவங்களையும் அட்டகாசமாக நிறுவும் திரைக்கதை எழுத்தாளர் சியாம் புஷ்கரன் திரைக்கதைக்கு தேசிய விருது பெற்றவர்.

ஒரு சின்ன தீப்பொறி ஊதப்பட்டு கனலாகி ஒரு காட்டுத்தீயாவது போல ஒரு சின்ன கதைக்கருவை வெவ்வேறு கலைஞர்கள் சேர்த்து ஒரு முழுமையான படமாக ஆக்கியிருக்கிறார்கள். இத்தனைக்கும், இது மெதுவாக நகரும் வகைமைப் படமாக இல்லாமல், பாட்டும், நகைச்சுவையும், சண்டையும், சஸ்பென்ஸும் சரியான விகிதத்தில்  கலக்கப்பட்ட ஒரு படைப்பாகியிருக்கிறது.  நீலமும், பச்சையும் பிரதான வண்ணங்களாக வைத்து சைஜூ காலித்தின் அழகியல் கலந்த ஒளிப்பதிவும், சுஷின் சியாமின் வருடல் இசையமைப்பும், சைஜூ ஸ்ரீதரின் நேர்த்தியான படத்தொகுப்பும் தங்கள் பங்களிப்பில், ஆகச்சிறந்த கூட்டுமுயற்சிக்கு அழகூட்டியிருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் சரியாக அமைவது ஒரு வரம். எல்லோர் நடிப்பையும் தாண்டி குறிப்பிடப்பட வேண்டியவர்கள் இருவர். வெட்டியாக அலைவதில், தம்பி முதன்முதலில் அண்ணே என அழைத்தது கேட்ட சிரிப்பில், எதிர்பாராத ஒரு சிக்கலில் மனமிழக்கும் கசப்பில், அதில் உடைவதில் என ஷாஜியாக வாழ்ந்த சவுபின் ஷாகிர் முதலாமனவர் [ சுடானி ப்ரம் நைஜீரியாவில் கலக்கியவரே தான் ]. உதிரிப்பூக்கள் சுந்தரவடிவேலுவின் கதாபாத்திரச் சாயலில், நிறைய குரூர ஆச்சரியங்கள் நிறைந்த,  தீர்மானிக்க முடியாத ஒரு நிறங்கொண்ட கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் பஹத் ஃபாசில். இவர்களைத் தவிர ஏராளமான புதுமுகங்களும் சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

கதையில் ஓரிடத்தில் தம்பி சொல்லி அண்ணனும் அவனின் தோழியும் வெளியே போய் ஒளி உமிழும் கடல்நீர், அபூர்வமாக நீல நிறத்தில் தளும்பி, ஒளிரும் தருணத்தை ரசிக்கும் காட்சியாகட்டும், அன்னைமேரி குழந்தை யேசுவை மடியில் கிடத்தியிருக்கும் படத்தை  வழிபடும் வீட்டிற்கு ஒரு தொலைதூர ஷாட்டில் சிறு படகில், முக்காடிட்டு குழந்தையேந்தி கன்னிமேரி போல ஷீலா வரும் காட்சி, பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் என  திரையில் எழுதப்பட்ட கவிதைக்கணங்கள் நிறைய.

'எழுதாக் கத போல் இது ஜீவிதம்' என்ற பாடல் வரிகளைப் போல இதுவரை வாழ்க்கையின் எழுதாத கதைகளை எழுதும் இந்தப் படம் கற்றாழையில் பூத்த அபூர்வமானதொரு  மஞ்சள் மலர்.

தொடர்புக்கு: tottokv@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்