கேர் ஆஃப் கஞ்சரபலேம்: தேசிய விருது பரிந்துரையில் சர்ச்சைக்குப் பிறகு தேர்வு

By செய்திப்பிரிவு

கடந்த வருடம் வெளியாகி விமர்சகர்களின் ஏகொபித்த ஆதரவைப் பெற்ற தெலுங்கு மொழிப் படமான 'கேர் ஆஃப் கஞ்சரபலேம்' தேசிய விருதுக்கான பரிந்துரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,'கேர் ஆஃப் கஞ்சரபலேம்' படத்தின் தயாரிப்பாளர் பிரவீனா பருசூரி இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என்பதால், இப்படம் தேசிய விருதுக்கான பரிந்துரைக்குத் தகுதி பெறாது என்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோரின் முயற்சிகள் காரணமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

கே.டி.ஆர், அருண் ஜேட்லி, ரத்தோர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை ட்விட்டரில் குறிப்பிட்டு, இந்தச் சிக்கல் குறித்து பிரவீனா முறையிட்டார். தெலுங்கு சினிமா பிரச்சினைகளை உடனடியாகக் கேட்டு தீர்வு தரும் அமைச்சர் கே.டி.ஆர் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்தார். மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தனது அலுவலகத்திலிருந்து பிரவீனாவை அழைத்து என்ன செய்யலாம் என்று பேசச் சொல்லி உத்தரவிட்டார். 

இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் ப்ரொடக்‌ஷன்ஸுடன் இணைந்தே படம் இங்கு வெளியானாதால், இதை மனதில் வைத்துப் பரிந்துரை செய்யலாம் என்று தெரிந்தது. எனவே படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பிரவீனா மகிழ்ச்சி தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விதி நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE