மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகளை ஜிஎஸ்டி துறை முடக்கியுள்ளது. அவர் செலுத்தாத சேவை வரிகளைத் திரும்பப் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் ஜிஎஸ்டி துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மகேஷ் பாபு கடந்த 2007- 08 ஆம் ஆண்டுக்கான சேவை வரியைச் செலுத்தவில்லை. பிராண்ட் அம்பாஸிடர், விளம்பரங்களில் தோன்றியது, மற்ற பொருட்களை விளம்பரப்படுத்தியது உள்ளிட்டவற்றுக்காக இந்த வரி விதிக்கப்பட்டது.

மகேஷ் பாபு கட்டாத மொத்த நிலுவைத் தொகை ரூ.18.5 லட்சம் ஆகும். இதற்காக நேற்று (வியாழக்கிழமை) ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் ரூ.73.5 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இது மொத்த வரி, வட்டி மற்றும் அதற்கான அபராதத் தொகை ஆகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜிஎஸ்டி துறை, ஆக்ஸிஸ் வங்கியிடம் இருந்து ரூ.42 லட்சத்தை மீட்டுள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி வெள்ளிக்கிழமை அன்று பணத்தைத் தருவதாக ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE