டாக்ஸிவாலா சர்ச்சை: ஒளிப்பதிவாளர் உருக்கமான வேண்டுகோள்

இணையத்தில் 'டாக்ஸிவாலா' வெளியாகி சர்ச்சையானதால் அப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நவம்பர் 16-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘டாக்ஸிவாலா’. ராகுல் சங்கிரிட்யான் இயக்கியுள்ள இப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகிவிட்டது.

எங்கிருந்து வெளியானது, யார் வெளியிட்டது உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள தீவிர முயற்சி எடுத்து வருகிறது படக்குழு. மேலும், இணையத்திலிருந்து படத்தை நீக்கவும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறார்கள். இதில் சில இணையத்திலிருந்து நீக்கியும் இருக்கிறது படக்குழு.

முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவின் படம் என்பதால், தெலுங்கு திரையுலகினர் மத்தியில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘டாக்ஸிவாலா’ படத்தின் ஒளிப்பதிவாளராஜன் சுஜித் சாரங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

''தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த பதிவுகளை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், 'டாக்ஸிவாலா' படம் திருட்டுத்தனமாக வெளியான விவகாரத்தை அடுத்து இந்தப் புகைப்படங்களை நான் பகிர்கிறேன்.

ஓராண்டுக்கு முன்னர் இந்த சூழலில்தான் நான் 'டாக்ஸிவாலா' படத்துக்காகப் பணியாற்றினேன். எனக்கு கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்துடன் 20 கிலோ எடை கொண்ட கேமராவை சுமந்து கொண்டு நீண்ட நேரம் ஷூட்டிங் செய்தேன். மருத்துவர்கள் அது கூடாது என அறிவுறுத்தினர். முடிந்தால் எனது தொழிலையே மாற்றச் சொன்னார்கள். ஆனால், நான் படப்பிடிப்பைத் தொடர்ந்தேன்.

பின்னர் சில மாதங்கள் படுக்கையில் விழுந்தேன். ஆனால், ஒரு பழமொழி இருக்கிறது. மனம் தளராமல் சாம்பலில் இருந்து மீண்டெழுதல் என்பதே அந்த வாசகம். நான் எப்போதுமே மனம் தளரவில்லை. எழுந்து நின்றேன். அதைச் செய்து காட்டினேன். எல்லாம் எனது சினிமாவுக்காக. அதுதான் சினிமா மீதான எனது காதலுக்கு சாட்சி.

நான் மட்டுமல்ல என்னைப்போல் இதயத்தையும் ஆன்மாவையும் செலவழித்து சினிமாவை காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு கனவு. 'டாக்ஸிவாலா' கூட எங்கள் அனைவரின் கனவு. அதில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அடங்கியுள்ளன. அதனால், அப்படத்தை எல்லோரும் திரையில் பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் நிச்சயம் ஏமாந்துபோக மாட்டீர்கள். பைரசியைத் தடுங்கள். நல்ல சினிமாவை ஆதரியுங்கள். நன்றி''.

இவ்வாறு ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE