கேரளாவில் வெள்ளப் பாதிப்பு: மம்மூட்டி ரூ.15 லட்சம், துல்கர் சல்மான் ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளாவின் வெள்ளப் பாதிப்புக்காக மம்மூட்டி 15 லட்ச ரூபாயும், துல்கர் சல்மான் 10 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்துள்ளது. 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 8,316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்காக மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டி 15 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஆக மொத்தம் மம்மூட்டி குடும்பத்தில் இருந்து 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து, முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE