கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மலையாள சினிமாவுக்கு 2024-ம் ஆண்டு வசூல், விமர்சன ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது. மாலிவுட்டில் வருடத்துக்கு வருடம் வசூல் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், இந்த ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ரூ.200 கோடி வசூலை நுகர்ந்திருக்கிறார்கள் சேட்டன்கள். அந்த வகையில் 2024-ல் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தப் படங்கள் குறித்து பார்ப்போம்.
மஞ்ஞும்மல் பாய்ஸ்: ரூ.20 கோடி பட்ஜெட்டை வைத்து ரூ.200 கோடியை வசூலிப்பதற்கு எல்லை தாண்டிய ஆதரவு மிக முக்கியம். அப்படியான ஓர் ஆதரவுக் கரத்தை சுபாஷாக குழியில் சிக்கியிருந்த மலையாள சினிமாவுக்கு, குட்டனாக இருந்து கைகொடுத்தவர்கள் தமிழ் ரசிகர்கள். பாதிக்கு பாதி வசூலில் பங்களித்தவர்கள் தமிழ் ரசிகர்கள். இளையராஜா இசையில் ‘குணா’ பாடலை ‘வைப்’ செய்ய கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படையெடுத்தார்கள். அதன் விளைவு படம் மொத்தமாக ரூ.240 கோடியை வசூலித்தது. சிதம்பரம் இயக்கிய இந்தப் படத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார்.
ஆடு ஜீவிதம்: பாலைவன வெயில் சூட்டில் உடல் மெலிந்து, வறண்ட உதட்டுடன் உயிரை பிடித்து நடப்பவனின் நடையை பின்தொடரும் கதையை ‘அவார்டு ஃபிலிம்’ என புறம் தள்ளாமல் மக்கள் ரசித்தார்கள். அதற்கான சாட்சி தான் ரூ.160 கோடி வசூல். ரூ.80 கோடி பட்ஜெட் என கூறப்பட்டாலும், பிருத்விராஜின் உடல் மெலிவை கண்டவர்கள் அதில் கொஞ்சம் உணவு வாங்கி அவருக்கு கொடுத்திருக்கலாம் என நினைக்காமல் இல்லை. எல்லாம் தாண்டி உண்மை கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பெரியோனே’ பாடல், பிருத்விராஜின் அசுர அர்ப்பணிப்பு ஆகியவை படத்துக்கு பலம். வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் கேரளத்தவர்களுக்கு கனெக்ட் ஆனது படம். ப்ளஸ்ஸியின் பொறுமையான திரைக்கதை வலிகளை சுமந்தது. இந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய மலையாள படமாக ‘ஆடு ஜீவிதம்’.
» பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு: ராஜ்கபூர் திரைப்பட விழாவுக்கு அழைப்பு!
» ‘காதல் தி கோர்’ மலையாள படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது: சிறந்த படமாக தேர்வு
ஆவேஷம்: ஜித்து மாதவனுக்கு தொட்டதெல்லாம் ஹிட். கடந்த ஆண்டு ‘ரோமாஞ்சம்’ என்றால், இந்த ஆண்டு ‘ஆவேஷம்’. ஃபஹத் ஃபாசிலின் அட்டகாசமான நடிப்பும், 70 சதவீத காமெடியும் - 30 சதவீத சென்டிமென்டும் கலந்த ஜாலியான படமாக ரசிகர்களை ஈர்த்தது ‘ஆவேஷம்’. இப்படியான ஸ்கிரிப்டை படமாக்கி அதனை மக்களை ரசிக்க வைக்கும் உக்தியில் தேர்ந்தவர் ஜித்து மாதவன். அவருக்கு தூணாக அமைந்தவர் ஃபஹத். ரூ.30 கோடி பட்ஜெட். ரூ.150+ வசூல் அடித்தது.
பிரேமலு: 2கே கிட்ஸின் காதல் கதை. வழக்கமான ரோம் - காம் ஜானர். ஆனால் திரைக்கதையின் மேஜிக் பார்வையாளர்களை ஈர்க்க, ரூ.130 + வசூல் கிடைத்தது. பட்ஜெட் ரூ.10 கோடி. இந்த பட்ஜெட்டை ஃபஹத், திலேஷ் போத்தன், ஷ்யாம் புஸ்கரன் பகிர்ந்து முதலீடு செய்து லாபம் பார்த்தனர். பெரிய அளவில் பரிட்சயமில்லாத விடலைப்பருவ நடிகர்கள், நஸ்லன், மமிதா பைஜூவின் தேர்ந்த நடிப்பு. கைகொடுத்த காமெடிக் காட்சிகள் திரைக்கதையோட்டத்தை வெள்ளமாக கரைபுரளச் செய்து க்ளைமாக்ஸுக்கு கொண்டு வந்தது நிறுத்தியதால் பார்வையாளர்களுக்கு திகட்டவில்லை.
ஏஆர்எம்: இந்த ரூ.100 கோடி க்ளப் வரிசையில் வித்தியாசமானது டோவினோ தாமஸின் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ திரைப்படம். காரணம் பீரியட் டிராமா கதை, மூன்று வேடங்களில் டோவினோ தாமஸ், பிரமாண்ட செட், 3டி ஆகியவற்றுடன் புரமோஷன் நிகழ்வுகள் சேர்த்து படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியது. எதிர்பார்த்த நிலையில், மோசமில்லாமல் ரூ.100 கோடியை வசூலித்தது.
மேற்கண்ட படங்கள் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்புமின்றி வசூலை குவித்தது கவனிக்கத்தக்கது. ரூ.40 கோடி பட்ஜெட், ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் என 5-வது இடத்தை பிடித்துள்ளது ஏ.ஆர்.எம். வைக்கம் விஜயலட்சுமியின் ‘அங்கு வானா கோனிலு’ பாடல் முன்பே ஹிட்டடித்திருந்தால் வசூல் கூடியிருக்கலாம். திபு நினன் தாமஸ் மெய்மறக்கும் இசை லயிக்க வைத்தது.
இந்த 5 மலையாள படங்கள் இந்த ஆண்டில் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளன. இதில் 4 படங்களின் முக்கிய கதைக்களம் கேரள நிலத்தை தாண்டியவை என்பது கவனிக்கத்தக்கது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ கொடைக்கானல், ‘ஆடு ஜீவிதம்’ துபாய், ‘ஆவேஷம்’ பெங்களூரு, ‘பிரேமலு’ ஹைதராபாத். சொந்த நிலத்தின் வேரைப்பிடித்து கதை சொன்னவர்கள் இந்த ஆண்டில் கொஞ்சம் நகர்ந்து வெவ்வேறு நிலங்களுக்கு பயணப்பட்டு வசூலை ஈட்டியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago