நடிகர் சங்கத்தில் மீண்டும் திலீப்: திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பு கண்டனம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டதற்கு திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

நடிகை ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய புகாரின்பேரில், பிரபல மலையாள நடிகர் திலீப்பை போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வந்தன. இதன்பேரில், நடிகர் சங்கத்திலிருந்து கடந்த ஆண்டு அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலையாள நடிகர் சங்கக் கூட்டத்தில், திலீப் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு, கேரள மாநிலத்தில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில், நடிகர் சங்கத்தின் இந்த முடிவுக்கு கேரள திரையுலகப் பெண்கள் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் முடிவானது, ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதுமட்டுமின்றி, அவரால் பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளான நடிகையை மேலும் அவமானப்படுத்துவது போலவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்தது மிகவும் தவறானது. இந்த முடிவினை எடுத்திருப்பதன் மூலமாக கேரள மக்களுக்கு நடிகர் சங்கம் கூற வருவது என்ன? தவறான முன்னுதாரணமான இந்த முடிவை நடிகர் சங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE