தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை அறிக்கையை வெளியிட சமந்தா கோரிக்கை

By செய்திப்பிரிவு

தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து விசாரணை நடத்திய, ஹேமா கமிட்டி அறிக்கை புயலைக் கிளப்பியுள்ளது. நடிகைகள் சிலர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் நடிகர்கள் மீது வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர், “தெலுங்கு சினிமா நடிகைகளான நாங்கள், ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறோம். இதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட மலையாள சினிமா துறையின் ‘விமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC)’ என்ற பெண்கள் அமைப்பையும் பாராட்டுகிறோம். தெலுங்கு திரைத் துறையில், கடந்த 2019-ம் ஆண்டு, ‘தி வாய்ஸ் ஆஃப் விமன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்த குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும். அது வெளியானால் தான் தெலுங்கு திரை உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும்” என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த கோரிக்கை தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE