“படப்பிடிப்புகளில் கண்காணிப்புக் குழு” - பாலியல் அத்துமீறல்களை தடுக்க ‘ஆட்டம்’ இயக்குநர் யோசனை

By செய்திப்பிரிவு

கொச்சி: “ஒவ்வொரு படப்பிடிப்பு தளங்களிலும், ஒரு கண்காணிப்புக் குழு இருந்தால், யாரோ நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற மன நிலையில், ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இந்தக் கண்காணிப்பு குழுவில், ஒருவர் இருக்கலாம் அல்லது 2 பேர் இருக்கலாம். ஆனால் அவர்கள் படத்தின் முழு உருவாக்கத்திலும் இருக்க வேண்டும். விரைவில் இப்படியான ஒரு செயல்முறை நடைமுறைக்கு வர வேண்டும்” என மலையாள இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி தெரிவித்துள்ளார்.

சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த முழு நீளப் படப்பிரிவுகளில் 3 தேசிய விருதுகளைப் பெற்ற மலையாள படம் ‘ஆட்டம்’. இந்தப் படத்தின் இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி அண்மையில் அளித்த பேட்டியில், “பாலியல் வன்கொடுமை குறித்து என் படத்தில் பேச வேண்டும் என நான் முடிவு செய்தபோது, அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் கண்ணோட்டங்கள் குறித்தும் பதிவு செய்ய நினைத்தேன். அதற்காக மலையாள திரையுலகில் நடப்பது குறித்தோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை மையமாக வைத்தோ நான் கதை எழுதவில்லை. இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை விவரித்தபோது, படம் வெளியானால் அது சமூகத்தில் நிலவும் மற்ற பிரச்சினைகளுடன் எளிதாக தொடர்புபடுத்தும்படி இருக்கும் என சொன்னார்கள். அது சரி தான். ஆனால் அப்படி நினைத்து நாங்கள் படம் எடுக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான பார்வையில் படத்தை உள்வாங்கி கொண்டனர்” என்றார்.

படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அவர் பேசுகையில், “இதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எல்லோருடனும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழலில், பெரும்பாலானவர்களின் பின்னணி குறித்தும், அவர்களைப் பற்றி தெரியாத நிலையில் தான் பணியாற்ற வேண்டியிருக்கும். ஆக, ஒவ்வொரு படப்பிடிப்பு தளங்களிலும், ஒரு கண்காணிப்பு குழு இருந்தால், யாரோ நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற மன நிலையில், ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இந்தக் கண்காணிப்பு குழுவில், ஒருவர் இருக்கலாம், அல்லது 2 பேர் இருக்கலாம். ஆனால் அவர்கள் படத்தின் முழு உருவாக்கத்திலும் இருக்க வேண்டும். விரைவில் இப்படியான ஒரு செயல்முறை நடைமுறைக்கு வர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE