நடிகர் ரவி தேஜாவுக்கு அறுவை சிகிச்சை: ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தசைநார் கிழிவு காரணமாக அவதிப்பட்டு வந்த தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 6 வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவல்: “நடிகர் ரவி தேஜா நடித்து வரும் ‘ஆர்டி75’ (RT75) படப்பிடிப்பின்போது, அவரது வலது கையில் தசை நார் கிழிந்தது. இருப்பினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றார். ஆனால், அது துரதிருஷ்டவசமாக இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் யசோதா மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முழுமையாக அவர் குணமாக 6 வாரங்கள் தொடர்ந்து ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ரவிதேஜா நடிப்பில் அண்மையில் ஆகஸ்ட் 15-ம் தேதி ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களால் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் ’ஆர்டி75’ என்ற இன்னும் தலைப்பிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பானு போகவரபு இயக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கிறார். தற்போது ரவி தேஜா ஓய்வெடுக்க வேண்டி இருப்பதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE