“ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் கடும் நடவடிக்கை தேவை” - டோவினோ தாமஸ்

By செய்திப்பிரிவு

கொச்சி: “தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஹேமா கமிட்டி குறித்து மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள ‘ஏ.ஆர்.எம்’ மலையாள திரைப்படம் செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வில் நடிகர் டோவினோ தாமஸிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது. ஆனால், யாராவது தவறு செய்திருந்தால், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது குறித்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டர்கள். தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், கொல்கத்தா மாணவி கொலை குறித்து பேசிய அவர், “எனக்கு மகள் இருக்கிறார்; தங்கை இருக்கிறார். மனைவி இருக்கிறார். இப்படியாக நான் என் குடும்பத்தில் நிறைய பெண்களுடன் வாழ்ந்து வருகிறேன். அந்த வகையில் அவர்கள் மீதும், ஒவ்வொன்று பெண்களின் பாதுகாப்பு குறித்தும் நான் அக்கறை கொண்டுள்ளேன்” என்றார்.

ஹேமா கமிட்டி குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி கூறுகையில், “இது துரதிஷ்டவசமானது. தவறு நடந்திருந்தால் அது நிச்சயம் தப்பு தான். ஆனால், இது குறித்து நாம் எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறோமோ, அந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படும். அந்த விழிப்புணர்வு மாற்றத்தை கொண்டு வரும் என நினைக்கிறேன்” என்றார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாள நடிகர் திலீப் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது. அதில் மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. | > முழுமையாக வாசிக்க: மலையாள திரையுலகில் பாலியல் சுரண்டல்: ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE