மலையாள திரைத் துறையில் பாலியல் சுரண்டல்கள் - ‘அம்மா’ அமைப்பின் ரியாக்‌ஷன் என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: “ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகியுள்ளதை அறிந்தேன். அதில் என்ன உள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியாது. முழுமையாக படித்து விட்டுதான் கூற முடியும். மிகவும் சென்சிட்டிவான இந்த விஷயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டியிருப்பதால் உடனே பதில் சொல்ல முடியாது” என மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகியுள்ளதை அறிந்தேன். அதில் என்ன உள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியாது. முழுமையாக படித்து விட்டு தான் கூற முடியும். அறிக்கையை முழுமையாக படித்துவிட்டு மற்றவர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு நிச்சயம் ஊடகத்தினரை சந்திப்போம். மிகவும் சென்சிட்டிவான இந்த விஷயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டியிருப்பதால் உடனே பதில் சொல்ல முடியாது. நான் வாய் தவறி எதையாவது சொல்லிவிட்டால் அது பிரச்சினையாகிவிடும்” என்றார்.

பெண் கலைஞர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த கேள்விக்கு, “நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், யார், யாருக்கு எதிராக புகார் அளித்தார்கள்? எந்த வகையான பிரச்சினை நிலவுகிறது, எந்த மாதிரியான பாகுபாடுகள் நிலவுகிறது என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியம்” என்றார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாள நடிகர் திலீப் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது. அதில் மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. | > முழுமையாக வாசிக்க: மலையாள திரையுலகில் பாலியல் சுரண்டல்: ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE