ஆசிஃப் அலி கரங்களால் விருது பெற மறுத்த மலையாள இசையமைப்பாளர் - ரசிகர்கள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

கொச்சி: மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண், நடிகர் ஆசிஃப் அலி கையால் கொடுத்த விருதை வாங்க மறுத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மலையாளத்தின் மூத்த எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயரைக் கொண்டாடும் விதமாகவும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும் ’மனோரதங்கள்’ என்ற ஆந்தாலஜி உருவாகியுள்ளது. 9 படங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆந்தலாஜினியின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இன்று கேரளாவில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய ஒரு படத்துக்கு ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். மலையாளத்தின் மூத்த இசையமைப்பாளரான இவர் ‘என்னு நிண்டே மொய்தீன்’ உள்ளிட்ட முக்கியமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மலையாள நடிகர் ஆசிஃப் அலி மேடையிலிருந்து இறங்கி, இசையமைப்பாளர் ரமேஷ் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து கொடுத்தார். அப்போது அந்த விருதை அவர் கையால் வாங்க மறுத்த ரமேஷ் நாராயண், அதற்கு பதிலாக இயக்குநர் ஜெயராஜை கொடுக்கச் சொன்னார்.

தர்மசங்கடமான இந்த சூழல்நிலையை எதிர்கொண்ட நடிகர் ஆசிஃப் அலி அமைதியுடன் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இசையமைப்பாளர் ரமேஷின் இந்தச் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE