காவிரி விவகாரம்: கர்நாடகாவில் ரஜினி - கமல் படங்கள் வெளியாவதில் சிக்கல்?

By செய்திப்பிரிவு

காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் ரஜினி மற்றும் கமல் இருவரின் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ரஜினி, கமல் இருவருமே தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவது குறித்து, "காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்" என ட்வீட் செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் ரஜினி. மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில், இருவரின் அடுத்த படங்கள் கர்நாடகாவில் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது. இருவரின் பேச்சுக்கு கர்நாடக சங்கங்கள் பலவும் தங்களது கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் 'காலா' மற்றும் 'விஸ்வரூபம் 2' படங்கள் வெளியீட்டின் போது பிரச்சினை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முன்பாக, கன்னட வெறியர் வட்டாள் நாகராஜ் 'பாகுபலி 2' வெளியீட்டின் போது கர்நாடகாவில் கடும் பிரச்சினையை உண்டாக்கினார். காவிரி விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்த சத்யராஜ் நடிக்கும் படம் எப்படி கர்நாடகாவில் வெளியாகலாம் என்ற கேள்வியை எழுப்பி, திரையரங்குகள் முன்பு அவருடைய அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE