மலையாள ‘பிக் பாஸ்’ சர்ச்சை: மத்திய அமைச்சரகம் கவனிக்க கேரள ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் அமைச்சகத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை எட்டியுள்ளது. இதனை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இந்தக் காட்சிகள் சில நாட்கள் முனபு வெளியான எபிசோடில் ஒளிபரப்பப்பட்டது.

இதனிடையில்தான், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியதாக வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கேரள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அந்த வழக்கில், "பிக் பாஸ் நிகழ்ச்சி விதிமீறலில் ஈடுபட்டிருப்பதால், நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்.

வன்முறை அடங்கிய காட்சிகளை ஒளிபரப்புவது பார்வையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுப் பாதுகாப்பு மற்றும் அறநெறிக்கு ஆபத்தை விளைவிக்கலாம்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், "போட்டியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்று உத்தரவில் தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE