“அது ஆயுர்வேத பீடி” - ‘குண்டூர் காரம்’ பட காட்சிகள் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘குண்டூர் காரம்’ படத்தில் தான் பயன்படுத்தியது ஆயுர்வேத பீடி என நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “‘குண்டூர் காரம்’ படத்தில் பயன்படுத்திய பீடி, உண்மையான பீடி அல்ல. அது ஆயுர்வேத பீடி. இதில் புகையிலை சார்ந்த எந்த பொருளும் இருக்காது. மாறாக இது லவங்க இலைகளால் செய்யப்பட்ட பீடி. முதலில் எனக்கு படக்குழுவினர் உண்மையான பீடியைக் கொடுத்தனர். அதனை புகைத்ததும் ஒற்றை தலைவலி வந்துவிட்டது.

உடனடியாக இந்த விஷயம் இயக்குநர் த்ரிவிக்ரம் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இதனை என்னால் புகைக்க முடியாது என கூறிவிட்டேன். பின்னர் படக்குழுவினர் ஆயுர்வேத்ததால் ஆன பீடியை கொடுத்தார்கள். இதில் எந்த பிரச்சினையும் இருக்காது என கூறிய பின்புதான் அதனை புகைத்தேன். நான் புகைபிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

குண்டூர் காரம்: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ம் திரையரங்குகளில் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும், மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் கொண்ட படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE