ஜெகன்மோகன் வீழ்ச்சியும் எழுச்சியும்! - ஜீவாவின் ‘யாத்ரா 2’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் ‘யாத்ரா 2’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகியுள்ளது. ‘யாத்ரா 2’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தையும் முதல் பாகத்தின் இயக்குநர் மஹி வி ராகவே இயக்கியிருக்கிறார்.

இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஆந்திராவின் தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிவருகிறது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? - ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்திய இப்படத்தில் சந்திரபாபு நாயுடு, சோனியா காந்தியின் உருவ அமைப்பை ஒட்டிய கதாபாத்திரங்கள் கையாளப்பட்டுள்ளன. காங்கிரஸும், தெலுங்கு தேசம் கட்சியும், ஜெகன்மோகனுக்கு எந்த அளவுக்கு நெருக்கடியை கொடுத்தன என்பதை சாம்பிளாக டீசர் உணர்த்துகிறது. மேலும், ஜெகன்மோகன் சிறை சென்றதும், அவரை புனிதப்படுத்துவதும், அவருக்கு உள்ள மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையிலும் அவரது வீழ்ச்சியும், எழுச்சியுமான காட்சிகள் வந்து செல்கின்றன.

சட்டமன்றத்தில் அவர் பேசும், ‘நான் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் மகன்’ என்ற வசனத்துடன் டீசர் முடிகிறது. படம் முழுக்க முழுக்க ஜெகன்மோகனை ஹீரோவாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதை டீசர் உணர்த்துகிறது. படம் பிப்ரவரி 8-ல் வெளியாகிறது. டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE