13 கால்நடைகளை இழந்து தவித்த சிறுவனுக்கு நடிகர் ஜெயராம் படக்குழு நிதியுதவி

By செய்திப்பிரிவு

கோட்டயம்: 13 கால்நடைகள் உயிரிழந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நடிகர் ஜெயராம் உள்ளிட்ட ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ படக்குழு சார்பாக ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாவட்டம் தொடுபுலா அருகே உள்ள வெள்ளியமட்டம் பகுதியில் மேத்யூ பென்னி என்ற சிறுவனின் 20 கால்நடைகளில் 13 கால்நடைகள் ஒரே நாளில் உயிரிழந்தன. இதனால் மேத்யூவுக்கு ரூ.6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 15 வயதான சிறுவன் மேத்யூ தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு விவசாயத்தை கவனித்து வருகிறான். ஃபுட் பாய்ஸன் காரணமாக கால்நடைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்த நடிகர் ஜெயராம் தான் நடித்து வரும் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ படக்குழு சார்பாக சிறுவனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் சிறுவனுக்கு நிதியுதவி அளிக்க நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த நிகழ்வை ரத்து செய்து அதற்கான பணத்தை சிறுவனுக்கு கொடுத்து உதவியுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள நடிகர் ஜெயராம், “நானும் பண்ணை விவசாயி தான். 2005-2012-ம் ஆண்டு காலக்கட்டத்தில் கேரள அரசிடமிருந்து பண்ணை விவசாயிக்கான விருதைப் பெற்றுள்ளேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எனது பண்ணையில் தான் அதிக நேரத்தை செலவிடுவேன். 6 ஆண்டுகளுக்கு முன் நானும் இதே போன்றதொரு நிலையை சந்தித்தேன். ஒரே நாளில் என்னுடைய 22 மாடுகள் உயிரிழந்தன.

அதையறிந்து நான் அழுதேன். விஷம் அருந்தியதால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான சரியான காரணம் இன்று வரை எனக்குத் தெரியவில்லை. நானும் இந்த சோதனையை கடந்துவந்தவன் என்ற முறையில் இந்த குழந்தைகளின் வலி எனக்குப் புரிகிறது. இவர்களுக்கு ஆதரவளிப்பதே எனது நோக்கம்” என்றார்.

இதனையடுத்து கேரள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிஞ்சு ராணி, சிறுவனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கேரள அரசு சார்பில் சிறுவனுக்கு உதவும் வகையில் 5 மாடுகள் இலவசமாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE