சொந்தமாக டிஜிட்டல் விநியோகம்?- தயாராகும் தயாரிப்பாளர்கள்

பிற நிறுவனங்களை சார்ந்திருக்காமல் சொந்தமாக டிஜிட்டல் விநியோகத்தை ஆரம்பிக்க தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் முக்கியமான 4 மாநில மொழி திரைத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் புதன்கிழமை அன்று சந்தித்தனர். பட விநியோகம் டிஜிட்டல் மயமாக மாறியுள்ள நிலையில், சொந்தமாக அதற்கென ஒரு உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக நடந்த சந்திப்பில், அதிகரித்து வரும் டிஜிட்டல் விநியோக கட்டணத்தை எதிர்த்து தெலுங்கு திரைப்பட துறை மார்ச் 1ஆம் தேதி நடத்தவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறினார்.

மேலும், "தற்போது இருக்கும் வழிகளைத் தாண்டி மாற்று ஏற்பாடாக டிஜிட்டல் விநியோகத்துக்கான உள்கட்டமைப்பை நாங்களே உருவாக்கும் சாத்தியங்கள் என்ன என்பதை விவாதித்தோம். விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நியாயமாக இல்லை. மீண்டும் க்யூப் தரப்பிடம் பேசுவது எந்த வகையில் பயனளிக்காது.

திரைத்துறை விநியோக தரப்பை நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது. அது தவறு. உண்மையில் அவர்கள் தான் விதிகளை தீர்மானிக்கிறார்கள். ஆனால் விநியோகிக்கப்படுவதோ எங்கள் பொருள். கட்டணம் குறைந்தால் சிறு பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள். டிஜிட்டல் விநியோகம் தொடர்பாக வேறு இரண்டு நிறுவனங்கள் எங்களை அணுகியுள்ளார்கள். இறுதி முடிவை ஜனவரி 31ஆம் தேதி எடுப்போம்" என்றார்.

நீண்ட நாட்களாகவே டிஜிட்டல் விநியோகத்துக்கு அநியாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இது குறித்து க்யூப் சினிமா தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் வி.செந்தில்குமாரிடம் கேட்டபோது, "நாங்களும் மாற்றுக் கட்டணங்களை வைத்து அணுகியுள்ளோம். மலையாள திரைத் துறையைச் சேர்ந்தவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு தரப்பிலிருந்து எங்களுக்கு பதிலே வரவில்லை. இவர்கள் சொல்லும் வேலைநிறுத்தம், போராட்டம் உதவாது. இன்னும் நிறைய பேர் நிறைய பணத்தை இழக்க நேரிடும். அவ்வளவே" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE