திரை விமர்சனம்: மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி 

By செய்திப்பிரிவு

சமையல் கலைஞரான அன்விதா (அனுஷ்கா ), தனது அம்மாவுடன் (ஜெயசுதா) லண்டனில் வசித்து வருகிறார். அம்மாவுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் திருமணத்தை வெறுக்கிறார். தாயின் மறைவுக்குப் பின் வாழ்வின் தனிமையை விரட்டத் திருமணம் செய்துகொள்ளாமல் செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆசை வருகிறது, அவருக்கு. அதற்கான டோனரை தேடுகிறார். அவர் வைக்கும் தேர்வில், அவரை விட வயது குறைவான, ஸ்டாண்ட் அப் காமெடியன் சித்து (நவீன்) கிடைக்கிறார். ஒரு கட்டத்தில் அன்விதாவை காதலிப்பதாகச் சொல்கிறார், சித்து. ஏற்க மறுக்கிறார் அன்விதா. உயிரணு தானத்துக்காகவே அவர் தன்னிடம் பழகுகிறார் என்பது தெரியவருகிறது நவீனுக்கு. பிறகு நினைத்தபடி அன்விதா, தாய்மை அடைந்தாரா? சித்துவின் காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பது படம்.

புதுமையான கதை ஒன்றின் மூலம் அழகான ரொமான்டிக் காமெடி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மகேஷ் பாபு. இதற்காக அவர் பயன்படுத்தி இருப்பது பார்த்துப் பழகிய காட்சிகள்தான் என்றாலும் அதை ரசிக்கும்படி சொன்ன விதத்தில் கவர்கிறார். கொஞ்சம் தடுமாறினாலும் வேறு மாதிரி சென்று விடக் கூடிய அபாயம் கொண்ட கதைதான். ஆனால் நகைச்சுவை, சென்டிமென்ட், ரொமான்ஸ் ஆகியவற்றைக் கூட்டாகச் சேர்த்து இறுதியில் எமோஷனலாக உருக வைத்துவிடும் திரைக்கதைக்குக் கொடுக்கலாம் பாராட்டு. ஒரு கட்டத்தில் மெதுவாகிவிடும் திரைக்கதை, உயிரணு தானத்துக்குப் பிறகு மீண்டும் பரபரப்பாகிறது.

ஸ்டாண்டப் காமெடியனாக நவீன் சொல்லும் நகைச்சுவைகளை விட, அனுஷ்காவுக்கும் அவருக்குமான உரையாடல்களில் அவ்வப்போது எட்டி பார்க்கும் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனக்கான சரியான கதையோடு திரும்பி வந்திருக்கிறார், அனுஷ்கா ஷெட்டி. சமையல் கலைஞராகவும் தனிமை உணர்ந்து குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவெடுப்பதும் அதற்கான டோனரை தேர்வு செய்யும் போதும் இறுதியில் ‘அவர் என் குழந்தைக்கு அப்பா’ என்ற உணர்வை வெளிப்படுத்தும்போதும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இன்றைய நவீன கால இளைஞனை அப்படியே பிரதிபலிக்கிறார் நவீன். துறுதுறுவென்ற ரசிக்க வைக்கும் நடிப்பால் கதைக்குத் தூணாக இருக்கிறார். படத்தில் அதிக கதாபாத்திரங்கள் இல்லை. நவீனின் தந்தையாக வரும் முரளி சர்மா, கதையின் திருப்பத்துக்குக் காரணமாக இருக்கிறார். நவீனின் அம்மாவாக துளசி, நட்சத்திர ஓட்டல் சேர்மனாக நாசர், மருத்துவர் ஹர்ஷவர்தன், அனுஷ்காவின் தோழி சோனியா தீப்தி என துணைப் பாத்திரங்களும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கின்றன.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமையும் கண்களில் ஒற்றிக்கொள்ளும் அழகுடன் தந்திருக்கிறது. ரதனின் இசையில் பாடல்களும் கோபி சுந்தரின் பின்னணி இசையும் கதைக்குத் தேவையானதைச் செய்திருக்கிறது.

ரிபீட் ஆகும் சில காட்சிகள், இரண்டாம் பாதியின் நீளம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி இருந்தால், இன்னும் சிறந்த ‘ஃபீல்குட்’ திரைப்படமாகி இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE