திரை விமர்சனம்: குஷி

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் வேலை கிடைத்ததும், குஷியாகச் செல்கிறார் விப்லவ் (விஜய தேவரகொண்டா). அங்கு புர்கா அணிந்து செல்லும் ஆரத்யாவைக் (சமந்தா) கண்டதும் காதல். தன்னைப் பின் தொடர்வதைத் தவிர்க்க அவர் சொல்லும் ஒரு பொய்யை, உண்மை என நம்பி விப்லவ் செய்யும் விஷயங்களைக் கண்டு ஆரத்யாவுக்கும் வருகிறது காதல். பிறகுதான் தெரிகிறது ஆரத்யா ஆன்மிகச் சொற்பொழிவாளர் சதுரங்கம் ஸ்ரீனிவாச ராவ் (முரளி சர்மா) மகள் என்பது. ஆன்மிகம் பொய், அறிவியல்தான் உண்மை என்கிற நாத்திகவாதியான லெனின் சத்யாவின் (சச்சின் கெடேகர்) மகன்தான் விப்லவ். இரண்டு துருவங்களும் சேரவே முடியாத நிலை. வீட்டை எதிர்த்து திருமணம் செய்யும் இவர்கள், தாங்கள் எவ்வளவு சிறப்பான கணவன் மனைவி என்பதை உலகுக்கு காட்டுவோம் என்று சபதம் போடுகிறார்கள். அவர்கள் சொன்னதைக் காப்பாற்றினார்களா? தங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கும் ஆன்மிகமும் அறிவியலும் இணைந்ததா? என்பது படம்.

கருத்தியல் மோதல்களைக் காதல் மூலம் வெல்ல முடியும் என்பதை, ஒரு ரொமான்டிக் கதையின் வழியாக அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷிவாநிர்வாணா. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட கதாபாத்திரத் தேர்வு, அவர்களின் நடிப்பு, மனதை வருடும் இசை,ஒவ்வொரு பிரேமையும் அழகாக அள்ளி வைத்திருக்கும் ஒளிப்பதிவு என அனைத்தும் அதற்குக் கைகொடுத்திருக்கிறது. பார்த்துச் சலித்த பழமையான கதையை என்னதான் கொஞ்சம் டிங்கரிங் செய்திருந்தாலும் எளிதில் யூகித்துவிட முடிகிற அழுத்தமில்லாத திரைக்கதை பலவீனம்தான். அதுவும் இரண்டாம் பாதியில் வரும் தாய்மை பிரச்சினை படத்தை மெதுவாக நகர வைத்துவிடுகிறது. ஆனாலும் ஈகோவுக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்துவிட்டு, மனிதத்தைத் தொலைத்துவிட்டதை உணரும் அந்த கிளைமாக்ஸ், அருமை.

படத்தின் பலமாக இருப்பது விஜயதேவரகொண்டா- சமந்தா கெமிஸ்ட்ரி. சின்ன சின்ன உணர்வுகளைக் கூட அழகாக வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறார் சமந்தா. அப்பாவை மீற முடியாமலும் காதலை கைவிட முடியாமலும் அவர் தவிக்கும் தவிப்பு, திருமணத்துக்குப் பிறகு சின்னதாக வெடிக்கும் பிரச்சினைக்குக் கூட அப்பா சொன்ன ஹோமத்தை செய்யாததுதான் காரணமாக இருக்குமோ என தன் நம்பிக்கையில் ஆழமாக எழும் சந்தேகம், காதல் காட்சிகளில் வெளிப்படும் மகிழ்ச்சி என சமந்தா பச்சக் என அள்ளிக்கொள்கிறார்.

விஜய் தேவரகொண்டா, காதலிக்கும்போது எதையும் செய்வதையும் திருமணத்துக்குப் பிறகு கோபமாகப் பேசிவிட்டு பிறகு ஆரத்யா இல்லாமல் தவிக்கும்போதும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

நாத்திகவாதி அப்பா சச்சின் கெடேகர், ஆன்மிகவாதி அம்மா சரண்யா பொன்வண்ணன், கிரகங்களைப் பேசும் முரளி சர்மா, அவர் அம்மாவாக லட்சுமி, சமந்தாவின் தோழியாக வரும் சரண்யா பிரதீப், காஷ்மீரில் பெங்காலி கலந்த இந்தி பேசும் ‘வெண்ணிலா’ கிஷோர், தமிழும் மலையாளமும் பேசும் ஜெயராம் - ரோகிணி ஜோடி என துணை கதாபாத்திரங்கள் தங்கள் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

ஹேஷம் அப்துல் வஹாப்பின் பாடல்களும் பின்னணி இசையும் கதையோடு கைப்பிடித்து இழுத்து அமர வைக்கின்றன. முரளியின் ஒளிப்பதிவில் காஷ்மீர் பனியும் குளிரும் அழகும் திரையை முழுமையாக ஆக்ரமிக்கின்றன.

ஒரு கட்டத்தில் படம் ஆணின் கண்ணோட்டத்தில் செல்லும் உணர்வைத் தந்துவிடுகிறது. அதைக் களைந்து ஆழமாகத் திரைக்கதையை அமைத்திருந்தால் ‘குஷி’,கொஞ்சம் அதிகமாகவே இருந்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்