’சாகுந்தலம்’ தோல்விக்குப் பிறகு சமந்தாவும், ‘லைகர்’ தோல்விக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவும், ’டக் ஜகதீஷ்’ தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷிவா நிர்வானாவும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய முனைப்பில் இணைந்துள்ள படம் ‘குஷி’. காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்வது, அதன் பிறகு அவர்களுக்குள் எழும் உறவுச் சிக்கல்கள் என ‘அலைபாயுதே’ பாணியில் உருவான இப்படம் குறித்த அலசல் இதோ...
கடவுள் நம்பிக்கை இல்லாதது மட்டுமின்றி கடவுளை வணங்குபவர்களின் வாடையே ஆகாதவர் லெனின் சத்யம் (சச்சின் கெட்கர்). நாத்திகர்கள் அமைப்பின் தலைவர். அவருக்கு நேரெதிர் துருவமாக விளங்குபவர் இந்து ஆன்மிக சொற்பொழிவாளர் சதுரங்கம் ஸ்ரீனிவாசராவ் (முரளி சர்மா). நாத்திகர் லெனின் சத்யனின் மகனான விப்லவ் (விஜய் தேவரகொண்டா). பணக்கார வீட்டின் பிள்ளையாக இருந்தாலும் விருப்பப்பட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். காஷ்மீருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு செல்லும் அவர், அங்கு யதேச்சையாக ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். பர்தாவில் இருக்கும் அவரை முஸ்லிம் பெண் என்று நினைத்துக் கொள்கிறார். அவர் மீது காதலில் விழுந்து துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
அவரின் தொல்லையிலிருந்து தப்பிக்க அவரிடம் சில பொய்களை ஆராத்யா சொல்கிறார். அப்படியும் விப்லவின் விடாமுயற்சியைக் கண்டு மனம் இறங்கும் ஆராத்யா, காதலுக்கே ஓகே சொல்கிறார். எதிர்பார்த்தப்படியே இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே, வீட்டை எதிர்த்து இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு புதிதாக வாழ்க்கையை தொடங்குகின்றனர். இதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் சில சிக்கல்கள் எழுகின்றன. அவற்றிலிருந்து இருவரும் மீண்டார்களா என்பதே ‘குஷி’ படத்தின் திரைக்கதை.
இதே கதைக்களத்தில் ஏராளமான படங்களை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. அவற்றில் ‘அலைபாயுதே’ போன்ற கிளாசிக் படங்களும் அடக்கம். ஆனால் ‘அலைபாயுதே’வில் இருந்த ஆழமான திரைக்கதையும், அழுத்தமான எமொஷனல் காட்சிகளும் ‘குஷி’யில் மிஸ்ஸிங். நாயகனின் தந்தையின் அறிமுகம், நாயகன் அறிமுகம், அவருக்கு காஷ்மீர் செல்லும் வாய்ப்பு கிடைப்பது என படத்தின் தொடக்கம் என்னவோ சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், சமந்தாவின் அறிமுகத்துக்குப் பிந்தைய காட்சிகள் அனைத்தும் ஒட்டாமல் செல்கின்றன. சமந்தாவைப் பார்த்ததும் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு விஜய் தேவரகொண்டா செய்வது எல்லாமே அப்பட்டமான ‘ஸ்டாக்கிங்’ மட்டுமே. இதெல்லாம் காதல் காட்சிகள் என்று இயக்குநர் ஷிவா நிர்வானாவிடம் யாரோ தப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
» மலையாள நடிகை அபர்ணா நாயர் மரணம்: போலீஸ் விசாரணை
» ஜெயிலர் மெகா ஹிட் | ரஜினிகாந்துக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்!
படத்தில் எதற்காக இந்த காஷ்மீர் காட்சிகள் என்பது புரியாத புதிர். நாயகியின் அறிமுகத்தை கதை நடக்கும் இடத்திலேயே செய்திருக்கலாமே. காஷ்மீரில் நடக்கும் காட்சிகளுக்கும் படத்துக்கும் இம்மியளவும் தொடர்பு இல்லாத போது காஷ்மீர் ராணுவம், தீவிரவாதிகள், சிரிப்பே வராத வெண்ணிலா கிஷோர் காமெடி என திரைக்கதை மனம்போன போக்கில் போகிறது. காமெடி என்ற பெயரில் “பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் கைப்பையில் வெடிகுண்டு இருக்கும் என்று பயந்துவிட்டேன்” என்று வெண்ணிலா கிஷோர் பேசுவது, பீஃப் பிரியாணியை முன்வைத்து வரும் வசனங்கள் எல்லாம் அப்பட்டமான துவேஷம்.
ஹீரோவுக்கு ஹீரோயினுக்கும் காதல் வரும் காட்சிகள் எல்லாம் படு அபத்தம். ஹீரோவை சந்தித்த இரண்டே நாட்களில் காதலுக்கு ஓகே சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே வாரத்தில் வீட்டைவிட்டு ஓடிப் போகும் அளவுக்கு செல்வதும், ஏதோ இன்பச் சுற்றுலா செல்வது போல “ஒரு ஆறு மாதத்தில் திரும்பி வந்துடுவா” என்று ஹீரோயினின் மொத்தக் குடும்பமும் வழியனுப்பி வைப்பதும் அபத்தம். திருமணத்துக்குப் பிறகு இருவருக்குள் எழும் சண்டைகள் எல்லாம் வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. ஒரு இடத்தில் கூட அவர்களின் உணர்வுப் போராட்டத்தில் நம்மால் தொடர்புப் படுத்திக் கொள்ளவே முடியாத அளவுக்கு எமோஷனல் காட்சிகள் எல்லாம் தேமேவென்று செல்கின்றன. மெட்ரோ ரயிலில் மனைவியை கிண்டல் செய்பவர்களை ஹீரோ பந்தாடுவது எல்லாம் படத்தில் சண்டைக் காட்சி வேண்டுமே என்று வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளன.
படத்தை கொட்டாவி வராமல் தாங்கிப் பிடிப்பது நடிகர்கள் மட்டுமே. விஜய் தேவரகொண்டா - சமந்தா இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அலுவலக சீனியர் அதிகாரியாக வரும் ரோகிணியும் அவர் கணவராக வரும் ஜெயராமின் நடிப்பும் இயல்பு. இவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. லட்சுமி, சச்சின் கெட்கர், சரண்யா, முரளி சர்மா, ராகுல் ராமகிருஷ்ணா என அனைவரும் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலங்கள் இசையும் ஒளிப்பதிவும். படத்தை கடைசி தாங்கிப் பிடிப்பவர் இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் தான். பின்னணி இசை மட்டுமே பல இடங்களில் படத்தை கொட்டாவி வராமல் காப்பாற்றுகிறது. ‘என் ரோஜா நீயா’, ‘ஆராத்யா’ பாடலும் ஈர்க்கின்றன. காஷ்மீர் தொடர்பான காட்சிகளில் முரளி ஜியின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
கடந்த 10,15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படங்களில் கட்டாயமாக நாயகியை மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்குலத்தையே திட்டும் பாடல் ஒன்று இடம்பெறும். இப்போது ஓரளவு பக்குவம் ஏற்பட்டு அவை வழக்கொழிந்துள்ள நிலையில், அது போன்ற ஒரு ‘பார்’ பாடல் இரண்டாம் பாதியில் வருகிறது. ராகுல் ராமகிருஷ்ணா ஒருசில ஒன்லைனர்கள், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரெஃபெரன்ஸ் போன்றவை கலகலப்புக்கு உதவுகின்றன. படத்தின் கிளைமாக்ஸில் சச்சின் கெட்கர், முரளி சர்மா பேசும் வசனங்கள் சிறப்பு.
’காதல்’ படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இப்படத்தின் முதல் பாதி அபத்தங்களை களைந்து, எமோஷனல் காட்சிகளில் அழுத்தத்தை கூட்டியிருந்தால் ரசிகர்களால் மனதில் நிலைத்திருக்கும் படமாக வந்திருக்கும் இந்த ‘குஷி’.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago