ராஜமவுலி வெளியிட்ட புகைப்படம்: ராம் கோபால் வர்மாவின் கருத்தால் பெரும் சர்ச்சை

By ஸ்கிரீனன்

ராஜமவுலி வெளியிட்ட புகைப்படத்தைக் கொண்டு, ராம் கோபால் வர்மா தெரிவித்த கருத்தால் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ராஜமவுலி. மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து இயக்கவுள்ள படத்திற்கு முன்பாக, மற்றொரு படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ராஜமவுலி. மேலும், தான் பணிபுரியும் படத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாகவும் மாற்றினார்.

இந்த மாற்றத்தால் ராஜமவுலி அடுத்து இயக்கவுள்ள படத்தில் ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை ராஜமவுலி உறுதிப்படுத்தவில்லை.

இப்புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் ராம் கோபால் வர்மா " பெண்களை வணங்குபவன் என்ற முறையில், இத்தகைய (ஆண்) ஓரினச் சேர்க்கை கலாச்சாரத்திற்கான அப்பட்டமான விளம்பரத்தைக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

ராம் கோபால் வர்மாவின் இந்தப் பதிவால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை கடுமையாக சாடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE