நடிகர் பாலா மீது வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

கொச்சி: தமிழில் ‘அன்பு’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, அஜித்தின் ‘வீரம்’, ரஜினியின் ‘அண்ணாத்த’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் மலையாள நடிகர், நடிகைகளை அவதூறாக பேசும் யூடியூபர் சந்தோஷ வர்கி என்பவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இந்நிலையில் மற்றொரு யூடியூபரான காக்கநாட்டைச் சேர்ந்த அஜு அலெக்ஸ் என்பவர் நடிகர் பாலா, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “நான் இல்லாத நேரம் யூடியூபர் சந்தோஷ் வர்கி மற்றும் இரண்டு பேருடன் பாலா என் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த என் நண்பர் முகமது அப்துல் காதரிடம், பாலா பற்றி நான் பதிவிட்ட ட்ரோல் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டினார்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ‘இது எச்சரிக்கை அல்ல, முடிவு’என்று குறிப்பிட்டு பாலா பதிவிட்டுள்ள வீடியோவில், அஜு அலெக்ஸ் வீட்டுக்கு அவர் சென்ற காட்சி இருக்கிறது. அந்த வீடியோவில், அஜு அலெக்ஸின் நண்பரிடம், “யாரையும் விமர்சிக்க உரிமை இருக்கிறது. ஆனால், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த உரிமையில்லை. அதை உங்கள் நண்பரிடம் நிறுத்தச் சொல்லுங்கள்” என்று கூறுகிறார்.

இந்நிலையில் அஜு அலெக்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் பாலா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE