நடிகர் சுதீப் ஸ்டைலில் முடி வெட்ட வேண்டாம்: சலூனுக்கு தலைமை ஆசிரியர் கடிதம்

By செய்திப்பிரிவு

பிரபல திரை நட்சத்திரங்கள், தங்கள் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு விதமான ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்கிறார்கள். இதை அவர்களின் ரசிகர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் பின்பற்றுவது வழக்கம். இந்நிலையில் நடிகர் சுதீப், 'ஹெப்புலி' (Hebbuli) என்ற கன்னடப் படத்தில் நடித்திருந்தார்.

அமலா பால் நாயகியாக நடித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. இதில் சுதீப் தனது ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக வெட்டி இருந்தார். படம் வெளியாகி 6 வருடங்கள் ஆகிவிட்டாலும் இந்த ஸ்டைல் இன்னும் கர்நாடகாவில் பிரபலமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் அந்த ஹேர்ஸ்டைலை பின்பற்றத் தொடங்கினர்.

இந்நிலையில் சுதீப் பாணி ஹேர்ஸ்டைலில் மாணவர்களுக்கு முடி வெட்ட வேண்டாம் என்று சலூன் கடைக்காரருக்குத் தலைமை ஆசிரியர் வலியுறுத்தி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள குளஹள்ளியில், அரசுப் பள்ளி இருக்கிறது. இதன் தலைமை ஆசிரியர் சிவாஜி நாயக் இந்தக் கடிதத்தை அந்தப் பகுதியில் உள்ள சலூன் கடை உரிமையாளர் சன்னப்பா சித்தராமப்பாவுக்கு எழுதினார்.

அதில் பள்ளி மாணவர்களுக்கு சுதீப் ஸ்டைலில் சிகையலங்காரம் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட சலூன் உரிமையாளர், மாணவர்களுக்கு இனி அவ்வாறு முடி வெட்ட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். தலைமை ஆசிரியரின் உருக்கமான இந்த வேண்டுகோள் கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE