பா.ரஞ்சித் ஒருங்கிணைக்கும் வானம் கலைத் திருவிழா, பி.கே.ரோசி திரைவிழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தும் வானம் கலைத்திருவிழா, பி.கே ரோசி திரைப்படவிழா சென்னையில் இன்று துவங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் இந்தத் திரைப்படவிழா 9, 10,11 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதன் துவக்கவிழா சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ரஞ்சித், ''இந்திய சினிமாவில் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சினிமா படங்கள் மக்களில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. சினிமாவில் பயன்படுத்தப்படும் மொழியும், வாழ்வியலும், ஆவணமாகின்றன.

கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் அடுத்த தலைமுறைக்கு எளிதாக கொண்டுசெல்லும் வலிமை சினிமாவுக்கு உண்டு. அப்படிப்பட்ட சினிமா இங்கு என்னவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பார்வையாளராக, படைப்பாளிகளாக நாம் அதை எவ்வாறு அணுகுகிறோம். சமூகத்தில் பிரதிபலிப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது. நாம் சினிமாவை எப்படி அணுகவேண்டியதாயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சமூக அக்கறையோடு, சமூக நீதி பேசுகிற படங்கள் இந்திய சினிமாவில் சமீபகாலங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படி சமூக நீதியை பேசுகிற படங்களை ஒரு திரைப்படவிழாவில் திரையிடவேண்டும் என்கிற நோக்கில் இந்த முயற்சியை துவங்கியிருக்கிறோம். தொடர்ந்து சமூக நீதியை பேசுவோம்'' என்றார்.

தலித் வரலாற்று மாத முதல் நிகழ்வாக பி.கே ரோசி பிலிம் பெஸ்டிவல் என்கிற பெயரில் துவங்குகிறது இந்த பிலிம் பெஸ்டிவலுக்கு அனுமதி இலவசம். சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் நான்கு படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், மராட்டி, தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழித்திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE