அமெரிக்காவில் இனவெறி அடிப்படையிலான சம்பவங்கள் இன்றும் தொடரும் சூழலில், எச்.பி.ஓ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘லவ்கிராஃப்ட் கன்ட்ரி’ (Lovecraft Country) தொடர் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. கறுப்பினத்தைச் சேர்ந்த நாயகன் தனது பூர்வீகத்தைத் தேடிச் செல்லும் சாகசப் பயணத்தில் மாயாஜால அம்சங்களும் இடம்பெற்றிருப்பது இத்தொடரின் தனித்தன்மை ஆகும்.
உலகப் புகழ்பெற்ற அமானுஷ்ய எழுத்தாளர் எச்.பி.லவ்கிராஃப்ட் எழுதிய நாவல்களில் கற்பனை ஊர்களே கதைக் களமாக இடம்பெறும். அந்தக் கற்பனைப் பிரதேசங்களுடன், அமெரிக்காவில் அமலில் இருந்த கறுப்பின மக்கள் மீதான இனவெறிச் சட்டங்களின் கொடூரத்தையும் இணைத்து 2016-ல் மாட் ரஃப் ‘லவ்கிராஃப்ட் கன்ட்ரி’ எனும் நாவலை எழுதியிருந்தார். அந்த நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட தொடர் இது.
1950-களில் கொரிய யுத்தத்தில் பங்கு பெற்றுவிட்டுக் காணாமல் போன தன் தந்தையைத் தேடி சிகாகோவுக்குத் திரும்புவான் கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞன் அடிகஸ் ஃப்ரீமேன். அவனுடைய தாயாரின் புதிரான வம்சாவளியைப் பற்றி தனக்குத் தெரியும் என்று அவன் தந்தை அவனுக்குப் புதிர் நிறைந்த கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பார். இதையடுத்து, தனது மாமா ஜார்ஜ் ஃப்ரீமேன், பால்ய காலத் தோழி லெட்டிஷியா லீவிஸுடன் தன் தந்தையைத் தேடிக் கண்டடையவும், தனது தாயாரின் ரகசியங்களை அறிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொள்வான் அடிகஸ். இந்தப் பயணத்தில் வெள்ளையின அமெரிக்கர்களின் இனவெறியையும் இவர்கள் எதிர்கொள்ள நேரும். 1950-களில் அமெரிக்காவில் நடைமுறையிலிருந்த ‘ஜிம் க்ரோ’ சட்டத்தின் இரும்புக் கரங்களுக்கு இடையே மூவரும் பயணிப்பர்.
இனவெறியின் உச்சம் என்றே ஜிம் க்ரோ சட்டத்தைச் சொல்லலாம். அந்தச் சட்டத்தின்படி ‘சன்டவுன் கவுன்ட்டி’ என்று அறிவிக்கப்பட்ட ஊருக்குள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கறுப்பினத்தவர்கள் இருந்தால் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள். எனவே, சூரியன் மறைவதற்குள் அவர்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட வேண்டும். இப்படிப் பல சன்டவுன் கவுன்ட்டிகளைத் தாண்டிய இவர்களின் பயணத்துடன் தொடங்குகிறது இத்தொடர்.
முழுக்க முழுக்க மாயாஜாலக் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டிருந்தாலும், வரலாற்றில் கறுப்பினத்தவர்கள் மீதான இனவெறி எந்த அளவிற்கு உக்கிரமாக இருந்தது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 16-ம் தேதி இத்தொடரின் முதல் எபிசோடை வெளியிட்டது எச்.பி.ஓ. நிறுவனம். இதுவரை இரண்டு எபிசோடுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு எபிசோடுகளும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளன. கடினமான பிரிட்டிஷ் ஆங்கில வசனங்கள் உலக ரசிகர்களுக்குச் சிறு குறையாக இருக்கிறது.
தொடரில் மொத்தம் பத்து எபிசோடுகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் 18-ம் தேதி வரை வாரம் ஒரு எபிசோட் என்ற கணக்கில் வெளியாக உள்ளது. மூலக் கதையான ‘லவ்கிராஃப்ட் கன்ட்ரி’ நாவல், எட்டு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. தற்போது இத்தொடரில் ஒரு நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது. மீதம் இருக்கும் ஏழு நிகழ்வுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குக் காட்சி வடிவமாகக் காட்டி நம்மை மிரட்ட இருக்கிறது எச்.பி.ஓ நிறுவனம்.
- க.விக்னேஷ்வரன்
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago