திருவண்ணாமலையில் இருந்து ஒரு ஹிப்ஹாப் பூங்கொத்து

By யுகன்

திரையிசைப் பாடல்கள், சுயாதீனப் பாடல்கள், கானா இசைப் பாடல்களுக்கு தனித் தனியாக ரசிகர்கள் இருப்பதைப் போலவே, சொல்லிசைப் பாடல்கள் எனப்படும் ஹிப்ஹாப் பாடல்களுக்கும் பெரும் மவுசு கூடியிருக்கிறது.

அண்மையில் திருவண்ணாமலையை சேர்ந்த ‘சான் டி’ என்பவர் தன் சொல்லிசைத் திறனை வெளிப்படுத்தும் 6 பாடல்களின் குறுந்தொகுப்பை வெளியிட்டுள்ளார். ஹிப்ஹாப் இசை, பெரு நகரங்களில் வாழும் இளைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் மாயையைத் தகர்த்திருக்கும் ‘சான் டி'யின் இயற்பெயர் சந்தோஷ்.

திரையிசைப் பாடல்களில் இருந்து விலகி, ஹிப்ஹாப் கலாச்சாரத்தைத் தேர்ந்தெடுத்துப் பயணிப்பதில் இருக்கும் சிரமங்கள் என்னென்ன, தான் யார்? தன் கனவுகள், லட்சியங்கள் என்னென்ன? சொல்லிசையில் வாழும் கலைஞர்களின் உலகம் எப்படி இருக்கிறது? என்பதை இந்தப் பாடல்களின் பூங்கொத்திலிருந்து மணக்க மணக்க ரசிக்க முடிகிறது. பாடல்களில் வார்த்தைகளின் சரவெடிகளுக்கு இடையில் நாம் எதிர்பாராத வகையில் அழகியலான வார்த்தைகள் சிலவும் மத்தாப்பூக்களாக மகிழ்விக்கின்றன.

பெருங்கடல் போல விடாத முயற்சி
கரைதொட வரும் அலையின் எழுச்சி
தினமும் பயிற்சி அடைந்தேன் வளர்ச்சி

- என்று நீளும் பாடலும் அதற்கேற்ற தாளகதியும் நிச்சயம் கேட்பவர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும். இசையின் இந்தப் புதிய முகமும் தேவைதான் என்பது காலத்தின் கட்டாயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE