கேன்ஸ் திரைப்பட விழா | வேட்டி - சட்டையில் கவனம் ஈர்த்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 

By செய்திப்பிரிவு

கேன்ஸ்: உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்டி - சட்டையில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்துள்ளார்.

பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த திரைப்பட விழா இம்மாதம் 27-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த விழாவில் நடக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் உலகம் முழுவதும் உள்ள திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன.

கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், சோனம் கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவனும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வேட்டி - சட்டையில் கலந்து கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது: “உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி - சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் G20 சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE