கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்காவில் வீசிய ஹார்வி புயல் டெக்சாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்டது. தற்போது ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்ற பிரபல ஆங்கிலப் படத் தயாரிப்பாளர் மீது ஆதாரங்களுடன் அடுக்கடுக்காய் பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்துவருவது, ஹாலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த 1998-ம் ஆண்டு வெளியாகி, சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65) கடந்த 35 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் படவிநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த வாரம் ‘நியூ யார்க் டைம்ஸ்’ விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது.
இந்த செய்தி தந்த உந்துதலை அடுத்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தாமாகவே முன்வந்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறி வருகிறார்கள். ஹாலிவுட்டில் மிக அதிக ஊதியம் பெரும் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி, கைனத் பால்ட்ரோ, காரா டெலவிங் உட்பட பல முன்னணி நடிகைகளும் துணை நடிகைகளும் புகார் கூறி வருபவர்களில் அடங்குவர்.
“நான் 22 வயதாக இருந்தபோது ஹார்வி வெய்ன்ஸ்டீனினால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டேன்” என்று தற்போது 44 வயதில் இருக்கும் முன்னணி நடிகையான கைனத் பால்ட்ரோ சில தினங்களுக்கு முன் வெளிப்படையாக கூறியது, ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் மனம் திறக்கக் காரணமாக அமைந்துவிட்டது.
இதற்கிடையில் ரோஸ் மெக்குவான் (44) என்ற ஹாலிவுட் நடிகை நேற்று ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது பாலியல் பாலாத்கார குற்றச்சாட்டை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அப்போது அவர் மற்றொரு ஹாலிவுட் பிரபலமான ராய் ப்ரைஸ் மீதும் பரபரப்பான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார்.
ராய் ப்ரைஸ், அமெசான் ஸ்டூடியோ நிறுவனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவின் தலைவராக இருக்கிறார். நடிகை ரோஸின் குற்றச்சாட்டை இதுவரை மறுக்காத நிலையில், ராய் ப்ரைஸை ஊதியம் இல்லாத விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது அவர் பணியாற்றி வந்த அமெசான் ஸ்டூடியோ நிறுவனம். ராய் ப்ரைஸ் போல இன்னும் பல பாலியல் சுரண்டல் முதலைகள் ஹாலிவுட்டில் சிக்கலாம் என்ற நிலையில் அமெரிக்க பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஹார்வி வெய்ன்ஸ்டீன் செய்திகள், அது தொடர்பான எதிர்வினைகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இதற்கிடையில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பரப்புரைக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனிடமிருந்து பெற்ற நன்கொடையை திரும்பி அளிக்கப்போவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக் குழு ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு வழங்கிய ஆஸ்கர் விருதை திரும்ப ஒப்படைக்கக் கோரும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் பிரிட்டீஷ் திரைப்பட அகாடமியான ‘பாப்டா’, உறுப்பினர் பதவியிலிருந்து ஹார்வி வெய்ன்ஸ்டீனை நீக்கி இருக்கிறது. நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து, ஹார்வி வெய்ன்ஸ்டீன் தனது கடந்த கால அழுக்கான வாழ்க்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago