AI தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள்

By செய்திப்பிரிவு

செயற்கை நுண்ணறிவை (AI) எதிர்த்து ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக இயந்திரங்கள், தொழில்நுட்பம் ஆகியவை எதிர்காலத்தில் உலகை ஆட்சி செய்வதாக கதைகளை எழுதி வந்த ஹாலிவுட் எழுத்தாளர்கள் தற்போது அந்த தொழில்நுட்பம் தங்கள் வேலைகளை பறித்து விடும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சினிமா மற்றும் தொலைகாட்சி தொடர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் கதை எழுதுவதை தடுக்க வேண்டும் என அமெரிக்க எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்பட மற்றும் தொலைகாட்சி தொடர் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

எங்கள் கதைகளை அவற்றுக்கு (AIக்கு) தீனியாக அமைவதையும், அவற்றின் மோசமான முதல் பிரதிகளை நாங்கள் சரிபார்ப்பதையும் தாங்கள் விரும்பவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

ஹாலிவுட்டில் தற்போது வயதான நடிகர்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும், அனிமேஷன் கதாபாத்திரங்களை உருவாக்கவும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில படங்களின் கதை உருவாக்கத்திலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கதை உருவாக்கத்தில் AI தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்தால் தாங்கள் ஓரம்கட்டப்படலாம் என்று எழுத்தாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட்ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தருதல் என மொழி சார்ந்த செயல்பாடுகளை மிக அதிவேகமாக சாட் ஜிபிடி செய்து வருகிறது.

பல்வேறு துறைகளில் ஏஐ மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இதை முறையாக கையாளாவிட்டால் மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவை (AI) எதிர்த்து ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE