இரண்டு பெண்கள் இதை செய்திருக்கிறார்கள் - 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' தயாரிப்பாளர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

"இந்தியாவின் தயாரிப்புக்காக நாங்கள் முதல்முறையாக ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறோம். இரண்டு பெண்கள் இதனைச் செய்திருக்கிறார்கள். எனக்கு இன்னும் நடுக்கம் நிற்கவில்லை" என்று தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்-ன் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தெரிவித்துள்ளார்.

95 வது ஆஸ்கார் விருது விழாவில், இந்தியா புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்து, கார்த்திகி கொன்சால்வ் இயக்கியிருக்கும் "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படம், சிறந்த ஆவணப் படத்துக்கான விருதினை வென்றுள்ளது. இதன் மூலம், ஆவணப்பட வரிசையில் ஆஸ்கர் வென்ற முதல் இந்திய படமாகவும், 1969ம் ஆண்டு "தி ஹவுஸ் தட் ஆனந்தா பில்ட்", 1979 ம் ஆண்டு, "அன் என்கவுண்டர் வித் ஃபேசஸ்" படங்களுக்கு பிறகு விருது பட்டியலின் இறுதி தேர்வு வரை சென்ற மூன்றாவது படம் என்ற சரித்திரத்தையும் தி எலிபெண்ட் வில்பரரஸ் படம் படைத்திருக்கிறது.

இந்த வெற்றி குறித்து ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தனது ட்விட்டர் பக்கத்தில்,"இந்தியாவின் தயாரிப்புக்காக நாங்கள் முதல்முறையாக ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறோம். இரண்டு பெண்கள் இதனைச் செய்திருக்கிறார்கள். எனக்கு இன்னும் நடுக்கம் நிற்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, விருதினை பெருவதற்காக ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவும், இயக்குனர் கார்த்திகி கோன்சால்வும் ஆஸ்கார் மேடையேறியபோது மிகவும் உணச்சிவசப்பட்டிருந்தனர். அப்போது, கார்த்திகி, எங்களுடைய படத்தை ஏற்றுக்கொண்டதற்காக அகாதமிக்கு நன்றி'' என்று தெரிவித்தார்.

இந்த வெற்றி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவிட்டுள்ள குனீத், "இந்திய தயாரிப்பு ஒன்று முதல் முறையாக ஆஸ்கார் விருது வென்றிருப்பதால் இன்றைய இரவு வரலாற்று சிறப்பு மிக்கது. இரண்டு பெண்களால் இந்தியா ஒளிர்கிறது'' என்று தெரிவித்துள்ளார். மேலும் ''அம்மா, அப்பா, குருஜி சுக்ரனா, இணைத் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், சிக்கியா குழு. நெட்பிளிக்ஸ், அலோக், சாராஃபினா அனைவருக்கும் நன்றி. என்னுடைய அன்பான கணவர் சன்னி, மூன்று மாத குழந்தைக்கும், இந்த கதையைக் கெண்டு வந்து அதை அழகாக கோர்த்த கார்த்திகிக்கும் நன்றிகள்...

இதை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும்...மிகவும் துணிச்சலான எதிர்காலம் இங்கே இருக்கிறது. வாருங்கள் முன்னேறலாம்" என்று தெரிவித்துள்ளார்.

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை பராமரித்து வரும் தம்பதிகளுக்கும், யானைகளுக்கும் இடையே இருக்கும் உணர்வு பூர்வமான உறவை கதையாகக் கொண்டது ‘தி எலிபெண்ட் விஸ்பரரஸ்’ ஆவணப்படம். அதில் பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரே குடும்பமாக மாறுகிறார்கள்.

பொம்மன், பெள்ளி தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்புதான் `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸ் -ல் வெளியாகிய இந்த ஆவணப்படம் இப்போது ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE