சோனியின் புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான 'அன்சார்டட்' அதே பெயரில், அதே கேரக்டர்களுடன் திரைக்கு விருந்தாக வந்துள்ளது.
ஆய்வாளர் மெக்கலன் திரட்டிய 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் தங்கப் புதையல், பல ரத்த காவுகளை வாங்கியும் மீட்டெடுக்கப்படாமல் உள்ளது. இந்த தங்கத்துக்கு சரியான வாரிசுகள் தான் என நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். அதேநேரம் பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது சுல்லி - நேட் - க்ளோயி கூட்டணி. தங்களிடம் இருக்கும் துப்புகளைக் கொண்டு உலகின் மிக பழமையான மர்மங்கள் நிறைந்த அந்தப் புதையலை இரு தரப்பும் எப்படி மீட்கிறது, இதன் பின்னணியில் இருக்கும் சவால்கள் என்ன என்பதை அட்வென்சர் திரைப்படமாக கொடுத்திருப்பதே 'அன்சார்டட்'.
"நமது நரம்புகளில் கொள்ளையர்களின் ரத்தம் உள்ளது. நாம் சர் பிரான்சிஸ் டிரேக்கின் வழித்தோன்றல்கள்" என்று சிறுவயதில் இருந்தே நேட் தனது சகோதரன் சாம் யங்-கால் புதையல் குறித்து தகவலை அறிந்துகொண்டு வளர்கிறார். ஒருகட்டத்தில் புதையலின் வரைபடத்தை திருடப்போன இடத்தில் இருவரும் மாட்டிக்கொள்ள, நேட்டை பிரிகிறார் சாம். சகோதரன் இல்லாமல் வளரும் நேட், அனுபவம் வாய்ந்த புதையல் வேட்டையாளன் சுல்லியால் புதையலை கொள்ளையடிக்கும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாக தொடங்குகிறது படம்.
நேட் அலைஸ் நாதன் டிரேக்காக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் சுனாமியை ஏற்படுத்திய 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' படத்திற்குப் பிறகு, டாம் ஹாலண்ட்டின் சாகச திரைப்படமாக 'அன்சார்டட்' வெளிவந்துள்ளது. நேட்டின் கதாபாத்திரத்தின் சாரம் டாம் ஹாலண்ட் வழியாக சரியாக வெளிக்கொணரப்பட்டு உள்ளது. ஆக்ஷன், எமோஷனல், கிண்டல் என ஆரம்பம் முதல் இறுதி வரை திரை முழுக்க டாம் தனித்தன்மையுடன் தெரிகிறார். அந்த அளவுக்கு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். சுல்லியாக மார்க் வால்ல்பெர்க் நடித்துள்ளார். சுல்லியின் பாத்திரம் பல குறைகளை, கேள்விகளை எழுப்பினாலும், வால்ல்பெர்க் தனது நடிப்பால் அதனை சரிசெய்கிறார்.
» மல்ட்டிவெர்ஸ் பாணியில் புதிய ‘பேட்வெர்ஸ்’ - ‘தி பேட்மேன்’ இயக்குநர் உறுதி
» பைக்கை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொள்வார் அஜித் - ‘வலிமை’ வில்லன் கார்த்திகேயா
சாதாரண திருட்டு வேலையாக துவங்கி மிகப் பெரும் அட்வென்சராக மாறும் இந்தப் பயணத்தில், ஹாலண்ட் மற்றும் வால்ல்பெர்க் இடையேயான கெமிஸ்ட்ரி, இருவரும் செய்யும் நகைச்சுவை ரசிக்க வைக்கின்றன. இவர்களுடன் க்ளோயி கேரக்டரில் நடித்துள்ள சோபியா அலி சண்டை காட்சிகளால் கவனம் ஈர்க்கிறார். கேப்ரியல், ஆண்டோயோ பேண்டரஸ் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்றப் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஜோம்பிலேண்ட், கேங்ஸ்டர் ஸ்க்வாட், ப்ர்ஸ்ட் திரைப்படத்தின் இயக்குநர் ஃப்ளீஷர், அன்சார்டட் கேமின் சாரத்தை, தனது சொந்த கற்பனைகளுடன் உயிர் கொடுக்க முற்பட்டுள்ளார். ஆக்ஷன் அட்வென்சர் படம் என்று கூறிய படக்குழு, விமான சண்டைக்காட்சி ஒன்றை வெகுவாக விளம்பரப்படுத்தினார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ லொக்கேஷன்களில் ஆக்ஷன் சீன்கள் படம்பிடிக்கப்பட்டன என்றார்கள். லாஜிக்களுக்கு அப்பாற்பட்டு அவர்கள் சொன்ன விமான சண்டைக்காட்சி ரசிகர்களை சலிப்படைய செய்யவில்லை என்றாலும், அதை தாண்டிய பெரிய ஆக்ஷன் சம்பவங்கள் இல்லாமல் அட்வென்சர் படமாகவே மெதுவாக செல்கிறது. ரஃபே ஜட்கின்ஸ், ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹாலோவே திரைக்கதை அமைத்துள்ளனர்.
திரைக்கதையில் சுல்லி, நேட் கேரக்டர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரியை கொண்டுவந்திருக்கும் இவர்கள், பூனை போன்ற சில காமெடி காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது. அதேபோல் புதையல் வேட்டையில் இருந்த ஓர் ஆதாரத்தையும் நேட் - சுல்லி கூட்டணி திருடிய பிறகும், மொன்காடா ஆட்கள் எப்படி சரியான இடத்தை தேடி வந்தார்கள் என்பது போன்ற சில குளறுபடிகள் திரைக்கதையின் குறைபாடுகளை சுட்டி காண்பிக்கிறது. ஆனால், தமிழ் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ள வசனங்கள் இந்தக் குறைகளை மறக்கடிக்கின்றன.
குறைகளை தாண்டி, ஹாலிவுட்டுக்கே உரித்தான பாணியில் விஎப்எக்ஸ் ரீதியாக பிரம்மாண்டம் காண்பித்து, ஒரு கேம் சீரிஸில் உள்ள ஈடுபாட்டை திரைப்படமாக பூர்த்தி செய்ய சிறப்பான முயற்சி எடுத்த வகையில் 'அன்சார்டட்' மிளிர்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago