‘ஜுராசிக் வேர்ல்டு’ வெளியீட்டுத் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு வெளியாகவிருந்த ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

14 வருடங்களுக்குப் பிறகு ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்பட வரிசையின் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்டு’ படம் வெளியானது. க்றிஸ் ப்ராட் நடிப்பில் கோலின் ட்ரெவாரோ இயக்கிய இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் மூன்றாம் பாகமான ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் மீண்டும் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ திரைப்படம் தற்போது 2022ஆம் ஆண்டு ஜூன் மாதன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குநர் கோலின் ட்ரெவாரோ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த மூன்று மாதங்களான அற்புதமான ஒரு குழுவுடன் இப்படத்தை உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக பணி புரிந்து வந்தேன். ஆனால் இன்னும் கூடுதலாக சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனினும் அதற்கு இப்படம் முழு தகுதியானதாக இருக்கும். அதுவரை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும்.

இவ்வாறு கோலின் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE