‘மெதட் ஆக்டிங்’ என்பது தற்சமயம் பரவலாக உச்சரிக்கப்படும் ஒரு பதம். ஹாலிவுட்டில் பல நடிகர்களின் பாணி இந்த மெதட் ஆக்டிங்கைப் பின்பற்றிதான் அமைந்திருக்கிறது. குறிப்பாக மார்லன் ப்ராண்டோ, ராபர்ட் டி நீரோ, அல் பசீனோ ஆகியவர்கள். தற்போது ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகராகக் கருதப்படும் டானியல் டே லூயிஸும் மெதட் ஆக்டிங்கைத்தான் பின்பற்றுகிறார்.
கொஞ்சம் தெளிவாக இந்த மெதட் ஆக்டிங்கைப் புரிந்துகொள்ள, ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். டேனியல் டே லூயிஸ், சிறந்த நடிகருக்கான தனது முதல் ஆஸ்கரை, 1989-ல் வெளிவந்த ‘மை லெஃப்ட் ஃபுட்’ (My Left Foot) என்ற படத்துக்காகப் பெற்றார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம், சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு ஓவிய எழுத்தாளரைப் பற்றியது. இந்தப் படத்தில் நடிக்கும்போது, முழுப் படப்பிடிப்பிலும் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்துகொண்டு சுற்றினார் லூயிஸ். அதேபோல், அந்தக் கதாபாத்திரத்தின் பிற அவயங்கள் இயங்காது என்பதால், படப்பிடிப்பு முழுவதிலும் அவரது எந்த அவயத்தையும் இயக்கவே இயக்காமல் பிறரை நம்பியே வாழ்ந்தார். இரண்டு மூன்று மாதங்கள் இப்படி வாழ்வது எத்தனை கடினம் என்பதை எண்ணிப் பாருங்கள். இதுதான் மெதட் ஆக்டிங். எதுவாக நடிக்கிறோமோ அதுவாகவே ஆவது. தனது ஒவ்வொரு படத்திலும் வெறித்தன மாக இந்தப் பாணியைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார் லூயிஸ்.
இந்த மெதட் ஆக்டிங் என்ற பாணி எப்போது உருவானது என்று பார்த்தோமேயானால், இருவரது முயற்சிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. முதலாவது நபர் - கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (Constantin Stanislavski). இரண்டாவது நபர், லீ ஸ்ட்ராஸ்பெர்க் (Lee Strasberg). இருவரைப் பற்றியும் அவர்களது முயற்சிகளைப் பற்றியும் பார்த்தாலேயே மெதட் ஆக்டிங் என்றால் என்ன என்பது விளங்கிவிடும்.
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, ஒரு ரஷ்ய நாடக நடிகர். நாடக இயக்குநராகவும் ஆனவர். இவரது காலம், 1863 - 1938. ரஷ்யாவில் தனது இளவயதில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, நடிக்கப்போகும் கதாபாத்திரத்தின் வேடத்தைப் போட்டுக்கொண்டு நிஜ வாழ்க்கையில் அந்தக் கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுமோ அப்படியெல்லாம் நடந்துகொள்வது இவரது இயல்பாக இருந்தது என்று அறிகிறோம். தனது இருபத்தைந்தாவது வயதிலேயே நாடக நடிகர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. ஆண்டு 1888. இதன்பின் நாடகங்களை இயக்கவும் தொடங்கினார்.
நமக்கு முக்கியமான தகவல், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய முறையான நடிப்பு வடிவம்தான் மெதட் ஆக்டிங். அவரது காலத்தில் இருந்த சிறந்த நாடக நடிக நடிகையரைக் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கிக்கு இருந்தது. இதன் மூலம், கதாபாத்திரங்களோடு ஒன்றி நடிக்கும் நடிகர்களையும், அவர்களுக்கு ஒரு படி கீழே நடிக்கக்கூடிய சராசரி நடிகர்களை யும் அவரால் அடையாளம் காணவும் முடிந்தது. சிறந்த நடிகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எப்படி அவ்வாறு நடித்தனர் என்று கவனித்தால், இந்த நடிகர்கள் அனைவரின் நடிப்பு முறைகளுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருந்தன. இது தற்செயல்தான் என்றாலும், அவற்றைக் கவனித்து, பதிவும் செய்யத் தொடங்கினார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. இப்படிச் சில வருடங்கள் அவர் முயற்சி செய்ததன் விளைவாக, நடிப்பைப் பற்றி ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்ய அவரால் முடிந்தது.
தனது கையில் இருந்த அந்த அறிக்கையின் உதவியுடன் நாடக நடிகர்களைப் பயிற்றுவிக்கும் முறைகளையும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கினார். இந்த முறைகளை உபயோகப்படுத்தினால், சாதாரண நடிகர்களும் சிறந்த நடிகர்கள் ஆகலாம் என்பதையும் முன்வைத்தார். அவரது முறைமைகள், மிகக் கடுமையான ஒழுங்கைப் பின்பற்றின. நாடக மேடையில் ஒரு நடிகர் எவ்வாறு நடக்க வேண்டும், அமர வேண்டும், பேச வேண்டும் என்பதைக்கூட விளக்கினார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. இவற்றைப் போன்ற விஷயங்களை ஒவ்வொரு முறையும் ஒரு நடிகர் திரும்பத் திரும்பச் செப்பனிட்டு, ஒவ்வொரு முறையும் சென்ற முறையைவிட மெருகூட்டினால்தான் நடிப்பில் சிறந்து விளங்க முடியும் என்பது அவரது கூற்று.
கோட்பாடுகளை அப்படி முன்வைக்கும்போது, ஸ்டானிஸ் லாவ்ஸ்கி இரண்டு விதமான முக்கியமான விஷயங்களை உருவாக்கினார். ஒன்று - உணர்வு சார்ந்த நடிப்பு. மற்றொன்று, செயல்பாடுகள் சார்ந்த நடிப்பு. இவையிரண்டுமே ஒன்றுக்கொன்று சார்ந்து இருந்தால் மட்டுமே சிறந்த நடிப்பு வெளிப்படும் என்பது அவரது கூற்று.
உணர்வு சார்ந்த நடிப்பு என்பது, குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் நடிகர்கள், அந்தக் காட்சியில் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுபூர்வமான நடிப்புக்குத் தூண்டுகோலாக, அந்தக் கதாபாத்திரம் அந்த நேரத்தில் அனுபவிக்கும் உணர்வுகளை மனதினுள் அனுபவிப்பது. உதாரண மாக, போரில் குண்டுகளால் உறுப்புகளை இழந்த சிறுவர்களை சந்திக்கும் ஒரு ராணுவ மேஜர், ஓய்வுபெற்ற பின்னரும் உறுப்புகள் சிதைந்துபோன குழந்தைகளைப் பார்க்கும்போது உணர்ச்சிவசப்படுதல். இந்தக் காட்சியை எடுத்துக்கொண்டால், அதில் நடிக்கும் நடிகர்கள், மனதினுள் அந்த மேஜர் அனுபவிக்கும் சித்ரவதையைத் தாங்களும் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் உணர்வு சார்ந்த சிறந்த நடிப்பு வெளிப்படும்.
ஆனால், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி இந்த முறையில் ஒரு பிரச்னையை எதிர்கொண்டார். அவரது நடிகர்கள் இப்படி மனதினுள் அந்தக் கதாபாத்திரத்துக்கான உணர்வுகளைக் கொண்டுவரும் போது அதில் சிலர் அந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு உடைந்துபோவது சில முறை நடந்தது. மேடையிலேயே காட்சி முடிந்த பின்னரும் கதறிக் கதறி அழுதுகொண்டிருந்த நடிகர்களை அவர் கண்டார். இதைப் பற்றியும் அவரது பிரத்யேக முறையில் ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்டானிஸ் லாவ்ஸ்கி, வெறும் உணர்வுரீதியான நடிப்பு மட்டும் போதாது என்பதைக் கண்டுகொண்டார். உணர்வுரீதியான நடிப்புக்கு ஒரு நடிகர் தன்னைத் தயார் செய்துகொள்ளும்போது, அதற்கேற்ற செயல்ரீதியான தயாரிப்பும் அவசியம் என்று புரிந்துகொண்டார். உதாரணமாக, நாம் மேலே பார்த்த ராணுவ மேஜர், மனதால் உடைந்து சிதறி அழும்போது, அந்த அழுகைக்கு அவரது உடல் எவ்வாறு ரியாக்ட் செய்கிறது? தனது தலையில் மாறிமாறி அடித்துக்கொண்டோ, நாற்காலியில் அமர்ந்தவாறு கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டோ அல்லது அந்த இடத்தை விட்டே ஓடியோ - இப்படி ஏதாவது ஒரு முறையில் உடலும் மனமும் இணையும்போது நல்ல நடிப்பு வெளியாகும் என்பதை உணர்ந்தார். இப்படிச் செய்தால், வெறும் உணர்வுரீதியாக மட்டும் ஒரு கதாபாத்திரத்தை அணுகும்போது அந்த நடிகர்கள் உடைந்து சிதறுதல் தவிர்க்கப்படுகிறது என்றும் புரிந்துகொண்டார். காரணம், மனதினுள் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க ஒரு நடிகர் பாடுபடும்போது, அதுவே கவனமாகப் பல நாட்கள் அதனை அவர் பயிற்சி செய்வதால் சில சமயங்களில் அந்த உணர்வுகள் அவரை முழுவதுமாக மூடிக்கொள்கின்றன. அதுவே, உடல்ரீதியாகவும் அவர் பயிற்சி செய்யும்போது, அந்த நேரம் பாதியாகக் குறைகிறது அல்லவா? அதுதான் காரணம்.
இப்படிப் பல்வேறு பரிசோதனை களுக்குப் பிறகு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய சில முறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம். இவைதான் தற்போதைய ‘மெதட் ஆக்டிங்’குக்குக் காரணிகளாக விளங்குகின்றன. அந்த உத்திகளை அடுத்த வாரம் பட்டியலிட்டு அலசுவோம். அப்போது, நடிப்பதில் இத்தனை நுட்பங்களும் நுணுக்கங்களும் இருக்கிறதா என நீங்கள் வியக்கக்கூடும்.
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி - லீ ஸ்ட்ராஸ்பெர்க் - ‘காட் ஃபாதர்’ படத்தில் மார்லன் பிராண்டோ
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago