நுழைவாயில்
‘காதல்' என்பது இந்தியத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் சொல்லப்படுகிறது என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். மிகவும் நுணுக்கமான அந்த உணர்வு, பெரும் பாலும் மிகைப்படுத்தப்பட்டே காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இயல்பான, இயற்கையான காதல் என்பது தமிழிலும், இந்தியத் திரைப்படங்களிலும் மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஆழமான, அழுத்தமான காதலைச் சொன்ன சில படங்களை இந்த வாரம் கவனிப்போம்.
அது 1965-ம் ஆண்டு. ஃப்ரான்ஸெஸ்கா என்பவள் ஒரு நடுத்தர வயதுப் பெண். ஐயோவா என்ற இடத்தில் இருக்கும் மாடிஸன் கௌண்ட்டியில் வசிக்கிறாள். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மிக மிகச் சாதாரணமான குடும்ப வாழ்க்கை. அவளது கணவன், இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெளியூரில் ஒரு கண்காட்சிக்குச் சென்றிருக்கையில் ராபர்ட் கிங்காய்ட் என்ற புகைப்பட நிபுணர் அவள் இருக்கும் இடத்துக்கு வருகிறார். அந்தப் பகுதியின் பாலங்கள் பற்றி ‘நேஷனல் ஜியாகிராஃபிக்’ இதழுக்குப் புகைப்படங்கள் எடுப்பது இவரது வேலை. மெல்ல மெல்ல இருவருக்கும் காதல் அரும்புகிறது.
அதுவரை அனுபவித்தே பார்த்திராத உணர்வுகள் ஃப்ரான்ஸெஸ்காவை மூடிக்கொள்கின்றன. நான்கு நாட்கள் மனம் முழுக்க இளமையுடன் கிங்காய்டுடன் சுற்றுகிறாள். பாலங்களைக் காட்டுகிறாள். கிங்காய்ட் இவளை ஒரு தேவதையைப் போல் கவனித்துக்கொள்கிறார். இதுவரை ஃப்ரான்ஸெஸ்காவின் வாழ்க்கையில் யாருமே அவள்மேல் இப்படியொரு அன்பைச் சொரிந்ததே இல்லை. கணவனும் குழந்தைகளும் திரும்பி வரும் நான்காவது நாள். கொட்டும் மழையில் ஒரு புறம் கிங்காய்டின் கார். இன்னொரு புறம் கணவனின் கார். யாரை ஃப்ரான்ஸெஸ்கா தேர்வு செய்கிறாள் என்பதுதான் படம்.
ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான மெரில் ஸ்ட்ரீப் ஃப்ரான்ஸெஸ்காவாக நடித்திருக்கிறார். ராபர்ட் கிங்காய்டாக க்ளிண்ட் ஈஸ்ட்வுட். அவர் நடித்த மிகச் சில ரொமாண்டிக் படங்களில் இது ஒன்று. அவரே படத்தை இயக்கவும் செய்தார். ராபர்ட் ஜேம்ஸ் வாலரின் ‘Bridges of Madison County' என்ற அழகிய நாவலைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட படம். 1995-ல் வெளியானது. ஹாலிவுட்டின் அந்த வருடத்தின் பெரிய ஹிட்களில் ஒன்று. காதலை உள்ளது உள்ளபடி பேசிய படங்களில் ஒன்று இது. இப்படத்தைப் பற்றி மதன், ‘ஜூனியர் போஸ்ட்’டில் இப்படம் வெளியான காலத்தில் எழுதிய கட்டுரையைப் பள்ளிக் காலத்தில் படித்திருக்கிறேன்.
புகழ்பெற்ற உலக சினிமா இயக்குநர் வோங் கார் வாய் (Wong kar - wai) இயக்கி, 2000ல் வெளியான படம் - ‘இன் தி மூட் ஆஃப் லவ்’ (In the Mood for Love). கதை நிகழும் காலம் 1962. கதை ஹாங்காங்கில் நடக்கிறது. நெரிசலான, சிறியதொரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பக்கத்துப் பக்கத்து அறைகளில் குடிவரும் சௌ மோ வான் என்ற ஆண் மற்றும் ஸோ லாய் ஸென் என்ற பெண் ஆகிய இருவருக்குள்ளும் எழும் காதலைப் பற்றிய படம். இருவருக்குமே தனித்தனிக் குடும்பங்கள் உண்டு.
இருவரின் தனிப்பட்ட திருமண வாழ்க்கைகளுமே சிறப்பாக இல்லை. சௌ மோ வானின் மனைவி, மிகவும் பிஸியான வேலையில் இருக்கிறாள். அதேபோல், ஸோ லாய் ஸென்னின் கணவனும் மிக மிக பிஸியாக, அடிக்கடி வெளிநாடு செல்பவனாக இருக்கிறான். இதனால் இருவரின் வாழ்விலுமே தனிமை பெரிய இடத்தை வகிக்கிறது. எதேச்சையாக இந்த இருவரும் சந்தித்துக்கொள்ளும்போது இயல்பாகக் காதல் எழுகிறது. இதன் பின் நடக்கும் சம்பவங்களே கதை.
சிதைந்த காதலைப் பற்றி எத்தனையோ படங்கள் உண்டு. அவற்றில் சிறந்த படங்களில் ஒன்று இது என்று தயங்காமல் சொல்லிவிடலாம். படம் நெடுக மவுனம் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஆரம்பம் முதல், இருவரும் சந்தித்துக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் கவிதை. அந்தக் காட்சிகளில் பெருகும் பின்னணி இசை மனதைப் பிழிகிறது.
இப்படத்தில் மவுனத்தைப் போலவே தனிமையும் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இருவரின் தனிமையும், பிரம்மாண்டமாக மாறி அவர்களை அழுத்துவது மிக நல்ல முறையில் காட்டப்பட்டிருக்கிறது. அந்தத் தனிமையின் காரணமாகவே, ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு சுரந்து, அது காதலாக மாறுகிறது. இத்தகைய காதலுக்கு இருவரும் கொடுக்கும் விலை என்ன? படத்தைப் பார்த்தால் புரியும்.
ஹாலிவுட்டின் இயக்குநர் ரிச்சர்ட் லிங்க்லேட்டரைப் பற்றி நாம் அவ்வப்போது மிகச் சுருக்கமாக இதற்கு முந்தைய கட்டுரைகளில் கவனித்திருக்கிறோம். மிக இயல்பாகப் படமெடுக்கும் சிலரில் ஒருவர். சென்ற ஆண்டு வெளியான ‘பாய் ஹுட்' (Boyhood) படத்தின் இயக்குநர். இவரது மிக முக்கியமான படங்களில் ‘சன்செட்/ சன்ரைஸ்' (Sunrise/Sunset) வரிசைப் படங்களை (trilogy) மறக்கவே முடியாது. Before Sunrise (1995), Before Sunset (2005) மற்றும் Before Midnight (2013) ஆகிய மூன்று படங்கள் உள்ளடக்கிய ட்ரையாலஜி. இவற்றின் சிறப்பு என்னவெனில், இந்த மூன்று படங்களுமே ஜெஸ்ஸி மற்றும் செலீன் ஆகிய ஜோடிகளுக்கிடையே நடக்கும் சம்பவங்கள்தான்.
முதல் படத்தில் சந்தித்துக்கொள்ளும் இந்த இருவரும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்குவார்கள். அவர்களுக்குள் இயல்பான சம்பவங்கள் நடக்கும். பிரிவார்கள். இதன்பின் இரண்டாவது படத்தில் பத்து வருடங்கள் கழித்து இருவரும் மறுபடியும் எதேச்சையாகச் சந்தித்துக்கொள்வார்கள். அப்போது ஜெஸ்ஸிக்குத் திருமணம் ஆகியிருக்கும். ஒரு மகன். செலீனுக்கு ஒரு புகைப்பட நிபுணர் காதலராக இருப்பார். இருந்தும் இந்த இருவராலும் ஒருவரையொருவர் மறக்க இயலாது.
இருவரும் பாரிஸின் வீதிகளில் நடப்பார்கள். மறுபடியும் இருவருக்குள்ளும் காதல் எழும்பும். மூன்றாவது படத்தில் ஒன்பது வருடங்கள் கழித்து இருவரையும் சந்திப்போம். இந்தமுறை ஜெஸ்ஸியும் செலீனும் இரண்டாவது படம் முடிந்தபின் திருமணம் செய்துகொண்டார்கள் என்று அறிவோம். ஆனால் இருவரின் திருமண வாழ்க்கை நிம்மதியாக இல்லை. இதனால் இருவரின் நண்பர்களும் ஒரு ஹோட்டல் அறையை ஒரு நாள் இரவு எடுத்து, இருவரையும் பழையபடி மனம்விட்டுப் பேசிக்கொள்ளச் சொல்வார்கள். அப்போது நிகழும் சம்பவங்களே படம்.
மிக மிக இயல்பாக நீங்கள் உங்கள் காதலன்/காதலியிடம் பேசிக்கொண்ட நாட்கள் நினைவில் இருக்கின்றனவா? இந்த மூன்று படங்களுமே முழுக்க முழுக்க அப்படியேதான் இருக்கும். அழகான, மென்மையானதொரு உணர்வை இந்த மூன்று படங்களுமே உங்களுக்கு அளிக்கும். இந்த ட்ரையாலஜியைப் பார்த்துவிட்டபின் மனதில் எழும் உணர்வை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அனுபவித்தால் மட்டுமே புரியும் உணர்வு அது. ரிச்சர்ட் லிங்க்லேட்டரின் மேதமைக்கு இயல்பான சான்றே இப்படங்கள்.
இவற்றைத் தவிரவும் ஆயிரக்கணக்கில் உலக அரங்கில் காதல் ததும்பும் படங்கள் உள்ளன. அவற்றில் சில: Copie Conforme (Abbas Kiarostami), Amlie (Jean-Pierre Jeunet), The Lake House, Notting Hill, The Notebook, 50 First Dates, Doctor Zhivago முதலியன. இந்தியாவில் இப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்பவர்கள் Raincoat, The Japanese Wife, Mr and Mrs Iyer போன்ற படங்களைப் பார்க்கலாம்.
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago