மீண்டும் எச்பிஓ மேக்ஸில் ‘கான் வித் தி விண்ட்’ படம்!- திரைத்துறையில் இனவெறியைப் பதிவுசெய்யும் காணொலியுடன் பதிவேற்றம்

By செய்திப்பிரிவு

கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக எச்.பி.ஓ மேக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்ட ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படம், தற்போது மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. படம் நீக்கப்பட்டதற்குக் கறுப்பினத்தவர்களே எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது எச்.பி.ஓ மேக்ஸ் நிறுவனம்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாகக் கறுப்பினத்தவர்கள் மீதான அடக்குமுறையைப் பிரதிபலிக்கும் கலை வடிவங்களும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், 1939-ல் வெளிவந்த ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படத்துக்கும் எதிர்ப்பு எழுந்தது. எச்.பி.ஓ மேக்ஸ் தளத்திலிருந்து இப்படத்தை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன.

மார்க்ரேட் மிட்ச்சல் எழுதிய ‘கான் வித் தி விண்ட்’ என்ற நாவலைத் தழுவி வெளிவந்த இத்திரைப்படம், 1860-களில் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பின்னணியாகக் கொண்டது. கறுப்பினத்தவர்கள் வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டுவந்ததைச் சித்தரிக்கும் படம் என்பதால் பலரும் இப்படத்தை விமர்சித்து வந்தனர். எனினும், அது அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் கதை என்பதால் பலரும் இந்தப் படம் நீக்கப்பட வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும், இப்படத்தில் நடித்ததற்காக, முதன்முதலில் ஆஸ்கர் விருது பெற்ற கறுப்பினக் கலைஞர் எனும் பெருமையைப் பெற்ற ஹாட்டி மெக் டேனியலின் உழைப்பும் பெருமையும் மறக்கடிக்கப்படும் என்றும் கறுப்பினத்தைச் சேர்ந்த பலர் கூறினர்.

இந்தச் சூழலில் இப்படம் மீண்டும் ‘எச்.பி.ஓ மேக்ஸ்’ தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், படம் தொடங்குவதற்கு முன்பாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் திரைத்துறைப் பேராசிரியரான ஜாக்குலின் ஸ்டீவர்ட் இப்படத்தைப் பற்றி விளக்கும் காணொலியும் இணைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எப்படி அணுகுவது, இதில் கறுப்பினத்தவர்களாக வரும் கதை மாந்தர்கள் பிரதிபலிக்கும் விஷயங்கள் என்ன என்பதை ஆழ்ந்து அலசுகிறார் ஜாக்குலின். ‘கான் வித் தி விண்ட்’ திரைப்படம் என்றென்றும் நீடித்து நிற்கும் பிரபலமான திரைப்படம் என்று கூறும் ஜாக்குலின், இத்திரைப்படத்தின் அவல வரலாற்றையும் விமர்சிக்கத் தவறவில்லை.

“படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு, கறுப்பினத்தவர்களின் வலியை இத்திரைப்படம் பிரதிபலிக்கும் என்று தயாரிப்பாளர் கூறியிருந்தார். ஆனால், படத்தில் கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக இருப்பதைப் புனிதப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்” என்று அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் ஜாக்குலின். மேலும், “இப்படத்தில் நடித்த கறுப்பின நடிகர்கள், முதல் திரையிடலின்போது மற்ற நடிகர்களுடன் அமர அனுமதிக்கப்படவில்லை. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மற்ற நடிகர்களுடன் அமர ஹாட்டி மெக் டேனியலே அனுமதிக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் ஜாக்குலின் ஸ்டீவர்ட்.

இந்தக் காணொலியுடன், அமெரிக்கத் திரைத் துறையின் வரலாற்று வல்லுநரான டொனால்ட் போக்ல் தலைமையில் 'The Complicated Legacy of Gone With The Wind' என்ற தலைப்பில் 2019-ல் டிசிஎம் கிளாசிக் திரைப்பட விழாவில் நடந்த கலந்துரையாடலின் காணொலியையும் இணைத்துள்ளது எச்.பி.ஓ மேக்ஸ் நிறுவனம்.

‘கான் வித் தி விண்ட்’ என்ற அற்புதமான படைப்பை சினிமா என்ற கலைவடிவில் கொண்டாடலாம். ஆனால், அதன்பின் இருக்கும் நிறவெறி வரலாற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

81 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு திரைப்படம் இவ்வளவு சர்ச்சைகளில் சிக்குவதைப் பார்க்கும்போது ஒரு விஷயம் உறுதியாகத் தெரிகிறது. சினிமா என்ற அழியாத படைப்பைச் சமகால அரசியல் மற்றும் சமூகத் தெளிவோடு கையாளாவிட்டால், வருங்காலம் நம் படைப்புகளைப் பந்தாடத் தயாராக இருக்கும் என்ற புரிதல் இன்றைய திரைத் துறையினருக்குத் தேவை என்பதுதான் அது!

- க.விக்னேஷ்வரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்