திரை விமர்சனம் - ப்ளட்ஷாட்

ராணுவ வீரர் ரே காரிஸன் (வின் டீசல்) மற்றும் அவரது மனைவி ஜினா இருவரும் வில்லன் ஆட்களால் கொல்லப்படுகின்றனர். ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜீஸ் என்ற அமைப்பின் தலைவர் எமில் ஹார்டிங் (கை பியர்ஸ்) என்பவரால் மீட்கப்படும் ரே காரிஸன் மீண்டும் உயிர் கொடுக்கப்படுகிறார். உடலில் செலுத்தப்படும் ‘நானைட்ஸ்’ எனப்படும் லட்சக்கணக்கான செயற்கை சிப்களால் அவரது காயங்கள் உடனுக்குடன் தானாகவே ஆறுகின்றன. அதீத உடல் பலமும் அவருக்குக் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஹீரோவாகவே மாறுகிறார் ரே.

தன்னையும் தன் மனைவியையும் கொன்றவரை தேடிச் சென்று கொல்கிறார். இங்கே ஒரு ட்விஸ்ட். எமில் ஹார்டிங் தனக்கு வேண்டாதவர்களைக் கொல்வதற்காக ரே காரிஸனைப் பயன்படுத்திக் கொள்கிறார். அதற்காக ரேவின் மூளையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சில நினைவுகளைச் செலுத்தி அதன் மூலம் தன் எதிரிகளைக் கொன்று வருகிறார். இந்த விஷயம் ரேவுக்குத் தெரிய வந்ததா? உண்மையில் ரேவையும் அவரது மனைவியையும் கொன்றது யார்? இவற்றுக்கான விடையே ‘ப்ளட்ஷாட்’.

அமெரிக்காவின் புகழ் பெற்ற வேலியண்ட் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதையான ‘ப்ளட்ஷாட்டை’ தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். சூப்பர் ஹீரோ படமென்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம் அதற்குண்டான நியாயத்தைச் செய்ததா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ரே காரிஸனாக வின் டீசல். தன்னால் என்ன முடியுமோ அதைச் சரிவரச் செய்துள்ளார். அவரது ஆஜானுபாகுவான தோற்றம் அவரது கதாபாத்திரத்தோடு ஒன்றிப் போகிறது.

படத்தின் ஒரே ப்ளஸ் தத்ரூபமான கிராபிக்ஸ் காட்சிகள். கிராபிக்ஸ் என்று சொல்லவே முடியாத அளவுக்கு நுணுக்கமாக படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு. வில்லன் துப்பாக்கியால் சுடும்போது வின் டீசலின் முகம் சிதைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் அந்த ஒரு காட்சியே உதாரணம்.

ஆனால் வெறும் கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே நம்பி திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. படம் தொடங்கி கதை சூடு பிடிக்கவே முதல் பாதியில் முக்கால்வாசி சென்று விடுகிறது. எந்தவித அழுத்தமோ, மெனக்கிடலோ இல்லாத மேம்போக்கான காட்சியமைப்பு பல இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது. முதல் பாதியின் பல காட்சிகள் ‘வான்டட்’ படத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் ‘வான்டட்’ படத்தில் இருந்த சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் கூட இதில் இல்லாமல் போனதுதான் சோகம்.

இயக்குநர் டேவிட் வில்சனுக்கு இது முதல் படம். ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜீஸ் ரே காரிஸனை தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? ஏற்கெனவே இதே தொழில்நுட்பம் செலுத்தப்பட்ட சிலர் அவர்களிடம் இருக்கும்போது அவர்களை வைத்தே கொலைகளைச் செய்யலாமே? ஒரு காட்சியில் வின் டீசலின் உடலில் இருக்கும் நானோ சிப்கள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றன. ஆனால் அப்போதும் அவர் உயிருள்ள மனிதரைப் போலவே நடமாடுகிறார். இதுபோன்ற படம் முழுக்க ஏகப்பட்ட கேள்விகளுக்கு இயக்குநரிடம் விடை இல்லை.

என்னதான் நல்ல கிராபிக்ஸ், பரபரக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் என்று நிரப்பி வைத்தாலும் திரைக்கதையில் சொதப்பி விட்டால் அவை யாவும் எடுபடாது என்பதற்கு இந்தப் படமே ஒரு சிறந்த உதாரணம்.

சூப்பர் ஹீரோ கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட படத்தில் கிராபிக்ஸ் என்ற ஒரு வஸ்துவை தவிர ஒரு சூப்பர் ஹீரோ படத்துக்குண்டான எந்த வித சுவாரஸ்ய காட்சிகளோ, திரைக்கதை ஜாலங்களோ இல்லை.

மார்வெல், டிசி சூப்பர் ஹீரோ படங்கள் வராமல் இருக்கும் இந்த இடைவெளியில் ஒரு நல்ல சூப்பர் ஹீரோ படம் பார்க்கலாம் என்று நம்பிச் சென்ற சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு பெருத்த ஏமாற்றம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE