2019 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். புத்தாண்டுக்குள் நுழைய இன்னும் ஓரிரு தினங்களே இருக்கும் நிலையில் ஊடகங்களும், நெட்டிசன்களும் இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலை போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றனர்.
ஹாலிவுட் ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு சிறப்பானதாக இருந்ததென்றே சொல்லவேண்டும். நீண்ட நாள் காத்திருந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், ஜோக்கர், லயன் கிங், டாய் ஸ்டோரி 4 உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. அதே சமயம் பெரிய பட்ஜெட்டில் உருவான பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாத சம்பவங்களும் நடந்தன. எந்த எதிர்பார்ப்புமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
அந்த வகையில் இந்தியாவில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள்:
1) Avengers: Endgame
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 22-வது படமாக வெளியான திரைப்படம் Avengers: Endgame. 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற Avengers: infinity war திரைப்படம் அதன் அடுத்த பாகமான Endgameக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருந்தது. இந்தியப் படங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் ரசிகர் பட்டாளம் திரையரங்குகளை நிறைத்தது. உலகம் முழுவதும் படம் வசூலித்த தொகை 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ. 370 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியப் படங்களைப் பின்னுக்குத் தள்ளியது. உலகம் முழுவதும் இதுவரை வெளியான படங்களில் அதிக தொகை வசூலித்த படமும் இதுவே.
2) Joker
டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற வில்லன் பாத்திரம் ஜோக்கர். ஜோக்கரை வில்லனாகக் கொண்டு இதுவரை பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருந்தாலும் 2008 ஆம் ஆண்டு வெளியான ’தி டார்க் நைட்’ படத்தின் மூலம் ஜோக்கர் கதாபாத்திரம் பிரபலமடைந்தது. இந்த வெற்றியைக் கணக்கில் கொண்டு ஜோக்கருக்கென்று ஒரு தனிப் படத்தை உருவாக்க டிசி நிறுவனம் முடிவெடுத்து உருவாக்கிய படமே டோட் பிலிப்ஸ் இயக்கிய ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலித்த தொகை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
3) The Lion King
டிஸ்னி தயாரிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதுமுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த கார்ட்டூன் படம் ’தி லயன் கிங்’. 90களில் பிறந்தவர்களுக்கு இந்தப் படத்தில் வரும் டிமோன், பும்பா, சிம்பா ஆகிய கதாபாத்திரங்களைத் தெரியாமல் இருக்கமுடியாது. இந்தப் படத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் மீண்டும் உருவாக்கத் திட்டமிட்ட டிஸ்னி நிறுவனம் இந்த முறை கார்ட்டூனாக இல்லாமல் முழுப் படமாகவே வெளியிட முடிவு செய்தது. ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூலித்த தொகை 2.6 பில்லியன் டாலர். இந்தியாவில் வசூலித்த தொகை ரூ.150 கோடி.
4) Once Upon a Time in Hollywood
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான குவண்டின் டாரண்டினோவுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் இயக்கத்தில் வெளியான படம் Once Upon a Time in Hollywood. அறுபதுகளின் இறுதியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, ப்ராட் பிட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் எதிர்மறை விமர்சனங்களிலிருந்தும் தப்பவில்லை. படத்தில் டாரண்டினோ ப்ரூஸ் லீயை கேவலப்படுத்தி விட்டார் என ப்ரூஸ் லீயின் மகள் ஷனோன் லீ குற்றம் சாட்டியிருந்தார்.
5) Toy Story 4
பிக்ஸாரின் படங்கள் என்றாலே அனிமேஷன் பட விரும்பிகளுக்கு தனி குஷிதான். அதிலும் ’டாய் ஸ்டோரி’ என்றால் கேட்கவே வேண்டாம். டிஸ்னி மற்றும் பிக்ஸாரின் தயாரிப்பான ’டாய் ஸ்டோரி’ படவரிசையின் நான்காம் பாகமாக வெளியான இந்தப் படத்துக்கு குழந்தைகளும் அனிமேஷன் பட ரசிகர்களும் கூட்டம் கூட்டமாய் படையெடுத்தனர். பிக்ஸார் படங்களின் வழக்கமான நகைச்சுவை வசனங்களும், சென்டிமென்ட் காட்சிகளும் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் கைகொடுத்தன. படம் வசூலித்த தொகை 1.073 பில்லியன் டாலர்.
6) Captain Marvel
மார்வெல் நிறுவனத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்துக்கு முன்னதாக வெளியாகும் மார்வெல் படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளியான படம் கேப்டன் மார்வெல். 90களில் நடக்கும் கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில் ப்ரீ லார்ஸன், சாமுவேல் ஜாக்ஸன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 21-வது படமான ’கேப்டன் மார்வெல்’ வசூலித்த தொகை 1.128 பில்லியன் டாலர்.
7) Spider-Man: Far From Home
இன்ஃபினிட்டி வார் படத்தின் இறுதியில் இறந்து போன ஸ்பைடர்மேன் ’எண்ட் கேம் படத்தில்’ மீண்டும் உயிர் பிழைத்து வருவாரா என்று ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில் ’எண்ட் கேம்’ படம் வெளியாவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டது மார்வெல் நிறுவனம். டாம் ஹால்ண்ட், சாமுவேல் ஜாக்ஸன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் வசூலித்த தொகை 1.132 பில்லியன் அமெரிக்க டாலர். இந்த வெற்றியே சோனி நிறுவனத்துக்கும் மார்வெல் நிறுவனத்துக்கும் பங்கு விஷயத்தில் பிணக்கு ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்தது.
8) Knives Out
இந்தப் படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து பிரபலமடைந்த க்றிஸ் எவான்ஸ், ஜேம்ஸ் பாண்டாக நடித்து பிரபலமான டேனியல் க்ரெய்க் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானதும் ஹாலிவுட் ரசிகர்களிடம் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அதிலும் த்ரில்லர் வகை படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வெறும் 40 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்ட இப்படம் உலகம் வசூலித்த தொகை 215 மில்லியன் டாலர்.
9) Shazam!
’வொண்டர் வுமன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு டிசி நிறுவனம் முழுக்க முழுக்க வேறு பாணியில் களமிறங்கிய படம் Shazam!. எப்போதும் டார்க் பின்னணியைக் கொண்ட டிசி சூப்பர் ஹீரோக்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரமான Shazam! படத்தின் ட்ரெய்லரே ரசிக்கும்படியாக இருந்தது. 10 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்ட இப்படம் வசூலித்த தொகை 364.6 மில்லியன் டாலர்.
10) Ford v Ferrari
கார் தயாரிப்பில் ஜாம்பவன்களான ஃபோர்ட் நிறுவனத்துக்கும் ஃபெராரி நிறுவனத்துக்கும் நடக்கும் வர்த்தகப்போரில் எப்படி இரு கார் பந்தய வீரர்களைப் பாதிக்கிறது என்பதுதான் ஃபோர்ட் v ஃபெராரி படத்தின் கதை. அறுபதுகளின் நடக்கும் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் க்ரிஸ்டியன் பேல், மேட் டேமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் பட்ஜெட் 10 மில்லியன் டாலர். படம் வசூலித்த தொகையோ 197 மில்லியன் டாலர்.
இவை உலகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படங்கள்.
இவை தவிர உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று இந்தியாவில் வெளியாகாமல் அல்லது இந்தியாவில் பெரிய வரவேற்பைப் பெறாமல் போன படங்கள்:
1) Us
பேய்ப் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஈவில் டெட் போன்ற படங்கள் வெளியான காலகட்டத்தில் உருவான அந்த எதிர்பார்ப்பு இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜோர்டான் பீலே இயக்கத்தில் உருவான திரைப்படம் Us. இந்தப் படம் இந்தியாவில் வெளியாகி வெற்றி பெறவில்லை என்றாலும் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வசூலித்த தொகை 255 மில்லியன் டாலர். படத்தின் பட்ஜெட் 20 மில்லியன் டாலர்.
2) The Irishman
மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கிய இப்படம் அமெரிக்காவின் புகழ்பெற்ற ’I Heard You Paint Houses’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ’ஐரிஷ்மேன்’ என்று அழைக்கப்பட்ட ஃப்ராங்க் ஷீரன் என்பவரையும் அவர் தொடர்பு வைத்திருந்ததாகச் சொல்லப்படும் ஜிம்மி ஹோஃபா என்பவரையும் சுற்றி நிகழும் கதை. படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமால் நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
3) Marriage Story
எண்ட் கேம் திரைப்படத்துக்குப் பிறகு ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் நடித்துள்ள படம். கணவன் மனைவிக்குள் நடக்கும் மனப் போராட்டங்களையும், அவர்களது மகனையும் சுற்றி நிகழும் கதை. இந்தப் படமும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமால் நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago