பூமியைக் காக்கும் ’டைட்டானிக்’ ஹீரோ!

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் சினிமாக்களின் பரிச்சயமே இல்லாதவர்கள் கூட இந்த இரண்டு படங்களை ஒருமுறையேனும் பார்த்திருப்பார்கள்.

ஒன்று 'ஜுராசிக் பார்க்'... இன்னொன்று 'டைட்டானிக்'.

அந்த டைட்டானிக் படத்தின் வழியே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானவர் லியோனார்டோ டிகாப்ரியோ. 50 படங்களைத் தாண்டி நடித்துக் கொண்டிருந்தாலும் இன்றளவும் நம்மவர்கள் அவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் ‘டைட்டானிக் ஹீரோ’.

டைட்டானிக், மேன் இன் தி அயர்ன் மாஸ்க், இன்செப்ஷன், ப்ளட் டைமண்ட் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்று ஆஸ்கர் விருதையும் பெற்றுவிட்ட டிகாப்ரியோவைத்தான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அதைத் தாண்டி டிகாப்ரியோ ஒரு மிகச்சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.

சுற்றுச்சூழலுக்காக லியோனார்டோ டிகாப்ரியோ செய்து வரும் பணிகள் என்னென்ன?

வாருங்கள் பார்க்கலாம்.

# 1997 ஆம் ஆண்டு ’டைட்டானிக்’ வெளியான கையோடு அடுத்த ஆண்டே ’லியோனார்டோ டிகாப்ரியோ ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கினார் 23 வயதே நிரம்பிய டிகாப்ரியோ. கடந்த 20 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் சூற்றுச்சூழல் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் இந்த அறக்கட்டளை சுற்றுச்சூழலுக்காக இதுவரை 80 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூபாய் 500 கோடி) உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

# கடந்த 2018ஆம் ஆண்டு மெக்சிகோ அதிபரைச் சந்தித்த டிகாப்ரியோ, உலகில் வெறும் 30 என்ற எண்ணிக்கையில் மட்டுமே எஞ்சியுள்ள அழிந்து வரும் உயிரினமான பாக்கிடா (Vaquita) எனப்படும் அரியவகை மீன்களைப் பாதுகாக்க வலியுறுத்தினார். அழிந்துவரும் உயிரினங்கள் குறித்து தான் தயாரித்த 'sea of shadows' என்ற ஆவணப்படத்திலும் இந்த மீன்களின் பாதுகாப்பை வலியுறுத்தியிருந்தார்.

# சுற்றுச்சூழல் பாதுகாப்பில் லியோனார்டோ டிகாப்ரியோவின் பங்களிப்பை கவுரப்படுத்தும் விதமாக மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை வண்டு ஒன்றுக்கும், டோமினிக் குடியரசால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிலந்திக்கும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் டிகாப்ரியோவின் பெயரைச் சூட்டியுள்ளன.

# ’தி ரெவனண்ட்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது 2016 ஆம் ஆண்டு டிகாப்ரியோவுக்கு வழங்கப்பட்டது. அந்த மேடையை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அவர், பருவநிலை மாற்றம் குறித்து சிறப்புமிக்க ஒரு உரையை ஆற்றியிருந்தார்.

# ஐ.நா.வின் அமைதித் தூதராக நியக்கப்பட்டிருந்த டிகாப்ரியோ 2014 ஆம் ஆண்டு ஐ.நா. பருவநிலை மாநாட்டில் நிகழ்த்திய உரை, உலக அளவில் தலைப்புச் செய்தியானது.

# 25 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடித்து வரும் டிகாப்ரியோ சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலம் குறித்து பல ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளார். அவற்றுள் இணையத்துக்காக அவர் தயாரித்த ’Water planet’ மற்றும் ‘Global warming’ ஆகிய இரண்டு ஆவணப்படங்கள் யூ டியூபில் காணக்கிடைக்கின்றன.

# 2007 ஆம் ஆண்டு தான் தயாரித்த ’The 11th Hour’ என்ற படத்தைத் திரையிட ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் டிகாப்ரியோ. அந்த நிகழ்வின் மூலம் லியோனார்டோ டிகாப்ரியோ ஃபவுண்டேஷனுக்கு கிடைத்த தொகை 40 மில்லியன் டாலர். உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்காக இதுவரை வசூலானதில் அதிக தொகை இதுவே.

# நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனத்தோடு இணைந்து டிகாப்ரியோ தயாரித்த ’Before the Flood’ என்ற புவிவெப்பமயமாதல் குறித்த ஆவணப்படம்தான் இதுவரை அதிக முறை பார்க்கப்பட்ட ஆவணப்படம். மூன்றே மாதங்களில் அந்த ஆவணப்படம் பெற்ற பார்வைகள் 60 மில்லியன்.

# புலிகளின் எண்ணிக்கைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் டிகாப்ரியோ கடந்த 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புலிகள் பாதுகாப்பு மாநாட்டில் 1 மில்லியன் டாலர் வழங்கினார். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், டிகாப்ரியோவுக்கு ’உண்மையான மனிதன்’ என்று புகழாரம் சூட்டினார்.

# அர்மேனியா நாட்டில் வறுமையால் வாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் பசியைப் போக்க ‘அர்மேனியாவின் குழந்தைகள் நிதி’ என்ற அமைப்பு செயலபட்டு வருகிறது. இந்த அமைப்பின் 2016 ஆம் ஆண்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டிகாப்ரியோ தனது அறக்கட்டளையின் மூலம் 65,000 மில்லியன் டாலரை வழங்குவதாக அறிவித்தார். இந்திய மதிப்பில் ஏறக்குறைய 425 கோடி ரூபாய்.

# 2014 ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடந்த கடல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட டிகாப்ரியோ கடல் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்து உரை நிகழ்த்தி, 7 மில்லியன் டாலரை கடல் பாதுகாப்புக்காக வழங்கினார்.

# இந்த ஆண்டின் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்த அமேசான் காட்டுத் தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் வழங்கியிருந்தார்.

# சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து இந்தியப் பிரபலங்களே வாய்மூடி மவுனம் காத்தபோது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த டிகாப்ரியோ சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவலை தெரிவித்து அதை உலக அளவில் பேசுபொருளாக மாற்றினார்.

# பல லட்சக்கணக்கான மக்கள் பின்தொடரும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களையும் தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, காட்டுயிர் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளுக்காகவும் பயன்படுத்தி வருகிறார்.

உலகமெங்கும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுகளும், விவாதங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேளையில் கடந்த 20 ஆண்டுகளாகவே புவிவெப்பமாயதலின் தீமையையும், பருவநிலை மாற்றம் வருங்கால சந்ததியினருக்கு ஏற்படுத்தப் போகும் பாதிப்பு குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் டிகாப்ரியோ. ஒரு நடிகனாக படங்களில் நடிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் தான் அடைந்த புகழின் மூலம் பூமியின் சுற்றுச்சூழலைக் காக்க அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

-சல்மான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

மேலும்