'Why so Serious?'
ஒரு ஹாலிவுட் சூப்பர் ஹீரோ பட வில்லனின் உருவத்தை, அந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களை போஸ்டர்களாகவும், வாகனங்களில் ஸ்டிக்கர்களாகவும், சமூக வலைதளங்களின் முகப்புப் படங்களாகவும் வைத்துக் கொண்டாடியதைக் கேள்விப்பட்டதுண்டா?
2008 ஆம் ஆண்டு வெளியான ’தி டார்க் நைட்’ படத்தில் ஹீத் லெட்ஜர் ஏற்று நடித்த ஜோக்கர் கதாபாத்திரத்தின் மூலம் இது சாத்தியமானது.
காமிக்ஸ் காலம் முதலே ஒரு சூப்பர் ஹீரோ எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு அவரது வில்லன்களும் பிரபலமாக இருப்பார்கள். சூப்பர்மேனுக்கு லெக்ஸ் லூதர், ஸ்பைடர்மேனுக்கு க்ரீன் கோப்ளின், அவெஞ்சர்ஸ் என்றால் தானோஸ், இந்த வரிசையில் பேட்மேன் என்றதுமே உடனடியாக நினைவுக்கு வருவது ஜோக்கர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வில்லன்கள் உடலளவில் அதீத பலம் பொருந்தியவர்களாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடமிருந்து ஜோக்கர் பெருமளவில் வித்தியாசப்படுகிறான்.
அவனுக்கு எந்த நோக்கமோ, ஆசையோ இருப்பதில்லை. அவனுக்கு பேட்மேனுடன் நேருக்கு நேர் மோதுமளவு உடல் பலமும் கிடையாது. ஆனாலும் பேட்மேன் வில்லன்களில் ஜோக்கர்தான் பிரதானமானவன்.
“Do I really look like a guy with a plan? You know what I am? I'm a dog chasing cars. I wouldn't know what to do with one if I caught it! You know, I just... do things.”
இது டார்க் நைட் படத்தில் ஜோக்கர் பேசும் ஒரு வசனம். இந்த ஒருவரியே ஜோக்கரின் கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லிவிடும். இத்தகைய புரிந்துகொள்ள இயலாத, சமூகக் கட்டமைப்புகளை எள்ளி நகையாடக்கூடிய ஒரு கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியவர் ஹீத் லெட்ஜர்.
’தி டார்க் நைட்’ படத்தின் முதல் பாகமான ’பேட்மேன் பிகின்ஸ்’படத்தின் இறுதிக் காட்சி, அடுத்த பாகத்தின் வில்லன் ஜோக்கர் என்பதற்கான குறியீட்டுடன் முடியும். அப்போது முதலே ஜோக்கர் ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
ஜோக்கர் பாத்திரத்தில் ஹீத் லெட்ஜெர் ஒப்பந்தம் செய்யப்பட்டதே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.
'பேட்மேன் பிகின்ஸ்' படத்தில் பேட்மேனாக நடிக்க இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் முதன்முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது ஹீத் லெட்ஜரிடம் தான். ஆனால் தனக்கு சூப்பர் ஹீரோ படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் லெட்ஜர். பின்னர் பேட்மேன் பாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்து, பிரபலமானது தனிக்கதை.
பிறகு ’பேட்மேன் பிகின்ஸ்’ படத்தால் ஈர்க்கப்பட்ட லெட்ஜெர் அடுத்த பாகமான 'டார்க் நைட்' படத்தில் ஜோக்கராக நானே நடிக்கிறேன் என்று நோலனிடம் தெரிவித்தார். லெட்ஜரின் ஆர்வத்தைக் கண்டு வியந்த நோலன் அவரை தன் படத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார். இவ்வாறு 'டார்க் நைட்' படத்தின் கதை, திரைக்கதை உருவாகும் முன்னரே ஹீத் லெட்ஜர் ஜோக்கர் பாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்படுகிறார்.
ஜோக்கராக ஹீத் லெட்ஜர் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே வரவேற்பைத் தாண்டி எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்தன. ஜாக் நிக்கல்ஸன் போன்ற ஒரு மாபெரும் ஆளுமை நடித்த ஜோக்கர் பாத்திரத்தை ஹீத் லெட்ஜர் ஏற்பதா? என்று இணையத்தில் ரசிகர்கள் புலம்பித் தீர்த்தனர். கேலியும் கிண்டலும் செய்தனர். பின்னாட்களில் வரலாறு மாறப் போகிறது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
ஜோக்கராக தன்னை வடிவமைத்துக் கொள்ள ஹீத் லெட்ஜரிடம் நோலன் ‘பேட்மேன்: கில்லிங் ஜோக்’ மற்றும் ’அர்காம் அஸைலம்’ ஆகிய இரண்டு காமிக்ஸ்களை கொடுத்து படிக்கச் சொல்கிறார்.
நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் ஜோக்கர் கதாபாத்திரத்துக்காக மாதக் கணக்கில் தயாராகிக் கொண்டிருந்தார் லெட்ஜர். ஒரு கொடூர வில்லனின் சிறப்பம்சமே அவனுடைய குரல் தான். அந்தக் குரலுக்கான பலனை அறுவடை செய்ய 6 வாரங்களுக்கும் மேலாக ஒரு ஹோட்டல் அறையில் தங்கி வெளி உலகைப் பார்க்காமல் பயிற்சி மேற்கொண்டிருந்தார் லெட்ஜர். ஜோக்கர் பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டார்.
’டார்க் நைட்’ கதை விவாதம், மற்ற நடிகர்களின் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில், ஜோக்கர் கதாபாத்திரம் மெல்ல மெல்ல ஹீத் லெட்ஜரை ஆட்கொள்கிறது.
படப்பிடிப்பு தொடங்குகிறது...
இயக்குநர் நோலன், கிறிஸ்டியன் பேல், உட்பட படக்குழுவினர் அனைவரும் அசந்து போகும் அளவுக்கு நடிப்பை வழங்குகிறார் லெட்ஜர். ஜோக்கரின் அடையாளமான இளஞ்சிவப்பு நிற கோட்டும், கலைந்து போன சிகையும், பயமுறுத்தும் மேக்கப்பும் லெட்ஜருக்குப் பாந்தமாகப் பொருந்திப் போகிறது.
படப்பிடிப்பு முழுக்க தான் குறிப்பெடுத்து வைத்திருந்த டைரியை கையிலேயே வைத்துக் கொண்டிருந்தார். ஜோக்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான ஒவ்வொரு டேக்கிலும் வெவ்வேறு விதமான பரிணாமங்களை வழங்கிக் கொண்டிருந்தார் லெட்ஜர்.
ஜோக்கருக்கான இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடித்த பின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரையும் கட்டியணைத்து விட்டு விடைபெற்றார் ஹீத் லெட்ஜர். அவரது ’ஜோக்கர்’ டைரியின் கடைசிப் பக்கத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் ‘BYE BYE'
2007ஆம் ஆண்டின் இறுதியில் 'டார்க் நைட்' படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த லெட்ஜர், தான் 'insomnia' எனப்படும் தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கூட தூங்கமுடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
‘என்னால் யோசிப்பதை நிறுத்த முடியவில்லை, என் உடல் சோர்வடைந்து விட்டது, மனம் மட்டும் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’...
அந்தப் பேட்டியில் 27 வயதே ஆன லெட்ஜர் கூறிய வார்த்தைகள் இவை.
ஆம்பியன் எனப்படும் சக்தி வாய்ந்த தூக்க மாத்திரகளைத் தொடர்ச்சியாக லெட்ஜர் பயன்படுத்தி வந்தார் . அவர் கடைசியாக நடித்த The Imaginarium of Doctor Parnassus படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் உடல்நலம் குன்றிய நிலையில் நடித்துக் கொண்டிருந்தார். சக நடிகர்களிடம் தனக்கிருக்கும் தூக்கமின்மையைப் பற்றியே எப்போதும் புலம்பிய லெட்ஜர் படப்பிடிப்புத் தளத்திலும் தூக்க மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொண்டார்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாலை 3 மணியளவில் மேன்ஹேட்டனில் உள்ள தனது வீட்டின் படுக்கையில் சுயநினைவற்ற நிலையில் கிடந்தார் ஹீத் லெட்ஜர். பணியாட்கள் போலீஸுக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர்களால் லெட்ஜருக்கு CPR சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனாலும் பலனில்லை.
அதிகாலை 3.36 மணிக்கு ஹீத் லெட்ஜர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இறக்கும்போது அவருக்கு வயது 28.
2 வாரங்கள் கழித்து வந்த உடற்கூறாய்வு அறிக்கை லெட்ஜர் தொடர்ந்து பயன்படுத்தி வந்த அளவுக்கு அதிகமான மாத்திரைகளின் கலவையே அவரது மரணத்துக்கான காரணம் எனக் கூறியது.
லெட்ஜரின் இந்த தீடீர் மரணம் ஹாலிவுட் ரசிகர்களையும், 'டார்க் நைட்' படக்குழுவினரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
லெட்ஜர் மரணித்து 6 மாதங்கள் கழித்து ’டார்க் நைட்’ படம் வெளியாகிறது. முன்பு கிண்டலடித்தவர்கள் எல்லாம் லெட்ஜரை வாயாரப் புகழ்ந்து தள்ளினார். ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடின. ஜோக்கர் கதாபாத்திரத்தை இதை விட யாரும் சிறப்பாக செய்திருக்கவே முடியாது என்று விமர்சகர்கள் எழுதினார்கள்.
அது மட்டுமா? சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, சாடர்ன் விருது, ஆஸ்திரேலியன் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் லெட்ஜருக்கு வந்து குவிந்தன. ஆனால் அவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள லெட்ஜர் உயிருடன் இல்லை.
'டார்க் நைட்' வெளியாகி 11 வருடங்கள் கழிந்துவிட்டன. அதுவரை வந்த பேட்மேன் படங்களில் குழந்தை வில்லன் பாணியில் சித்தரிக்கப்பட்ட ஜோக்கரை ஹீத் லெட்ஜர் வேறொரு தளத்தில் கொண்டு சென்று நிறுத்தினார். காமிக்ஸ் பற்றி அறியாதவர்களும், ஹாலிவுட் படங்களைப் பற்றி பரிச்சயம் இல்லாதவர்களும் கூட ஜோக்கரைக் கொண்டாடினார்கள். செல்போன், கணினி வால் பேப்பர்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் முகப்புப் படங்கள், பைக் கார் என அனைத்தையும் லெட்ஜரின் படத்தால் அலங்கரித்தார்கள்.
கடந்த மாதம் ஜோக்கர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி வெளியான ’ஜோக்கர்’ படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி பலரது பாராட்டையும் ஹாக்கின் ஃபீனிக்ஸ் பெற்றிருந்தாலும் ஹீத் லெட்ஜரின் ஜோக்கருக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது.
இனிவரும் காலங்களில் எத்தனை ஜோக்கர்கள் வந்தாலும் உலகின் ஏதோவொரு மூலையில் உள்ள ஏதோவொரு ரசிகரின் செல்போன் திரையிலோ, பைக் ஸ்டிக்கராகவோ கிழிந்த வாயுடன் ஜோக்கராக லெட்ஜர் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்.
முகம்மது சல்மான்
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago