சமூகத்தின் பல அடுக்குகளிலும் தன் வாழ்நாள் முழுவதும் உதாசீனப்படுத்தப்படும் ஒருவன் உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடியவனாக மாறுவதே ‘ஜோக்கர்’ படத்தின் கதை.
’பேட்மேன்’ கதாபாத்திரத்தின் பிரதான வில்லனான ஜோக்கரை அடிப்படையாக வைத்து இதுவரை பலவகையான திரைப்படங்கள் வந்திருந்தாலும் 2008 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘தி டார்க் நைட்’ படம்தான் ‘ஜோக்கர்’ பாத்திரத்தை உலகம் முழுவதும் பரவலாகக் கொண்டு சேர்ந்தது. அதுவரை ஜோக்கரை ஒரு குழந்தை பட வில்லன் பாணியில் சித்தரித்துக் கொண்டிருந்த வழக்கத்தை உடைத்து அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு உயிரோட்டத்தைக் கொடுத்திருந்தார் ஹீத் லெட்ஜர். அந்தக் கதாபாத்திரமே அவரது உயிரையும் பறித்து விட்டதாக கூறப்படுவதுண்டு.
அத்தகைய வலிமையான பாத்திரத்தை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் ’ஜோக்கர்’.
எப்படியாவது ஸ்டாண்ட் அப் காமெடியனாகி விடவேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் ஆர்தர் ஃப்ளெக், தனது வயதான தாயுடன் ஒரு சிறிய அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். ஆர்தருக்கு அவர் பிறந்தது முதலே ஒரு பிரச்சினை உள்ளது.
தான் பதட்டமாக இருக்கும்போது கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு அவருக்கு வந்துகொண்டே இருக்கும். இந்தப் பிரச்சினையால் அவருடைய வாய்ப்புக்கள் பறிபோவதுடன் ஏராளமான துன்பங்களையும் அனுபவிக்கிறார். ஒருமுறை சாலையில் ஒரு கும்பலால் தாக்கப்படும் ஆர்தருக்கு அவரது சக ஊழியர் ஒருவர் துப்பாக்கி ஒன்றைக் கொடுக்கிறார். ஆனால் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்ட அத்துப்பாக்கியால் அவருடையே வேலை போகிறது. அதன்பிறகு மீண்டும் அந்தத் துப்பாக்கியாலேயே மிகப்பெரிய பிரச்சினை ஒன்றைச் சந்திக்கும் ஆர்தருக்கு தன்னைப் பற்றிய ஒரு உண்மையையும் தன் தாயின் மூலம் தெரிந்து கொள்கிறார்.
இதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் கோர்வைகள் எப்படி ஆர்தரை ஒரு ஜோக்கராக மாற்றுகிறது? மிகப்பெரும் பணக்காரரும் பேட்மேனின் தந்தையுமான தாம்ஸ் வேய்னுக்கும் ஜோக்கருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே ஜோக்கரின் மீதிக்கதை.
ஆர்தர் (அ) ஜோக்கராக ஹாக்கின் ஃபீனிக்ஸ். மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாக தூக்கிக் சுமக்கிறார். இவருக்கு அடுத்த நிலையில் கூட படத்தில் சொல்லும்படி கதாபாத்திரங்கள் இல்லை. ஜோக்கர் என்றாலே ஹீத் லெட்ஜர்தான் என்று மாறிப் போன நிலையில் லெட்ஜரின் ஞாபகமே வராத அளவுக்கு சின்னச் சின்ன அசைவுகளில் கூட நுணுக்கம் காட்டியிருக்கிறார். ஜோக்கராகப் பரிணாமம் அடைந்து வெளியே வரும் காட்சியில் அரங்கம் ஆர்ப்பரிக்கிறது.
சிறிது பிசகினாலும் கொட்டாவி வரவைத்து விடும் திரைக்கதையில் கம்பி மேல் நடப்பது போல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் டோட் பிலிப்ஸ். சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளோ, நகைச்சுவை வசனங்களோ, பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளோ இல்லை. ஆனாலும் மக்கள் ஆரவாரத்துடன் ரசித்துப் பார்க்கிறார்கள்.
காமிக்ஸில் இருப்பது போல அப்படியே எடுத்து வைக்காமல் ஜோக்கரின் முடிவையும் பேட்மேனின் ஆரம்பத்தையும் இணைத்துப் போட்ட முடிச்சு சிறப்பு. ஆனால் இதன் பிறகு வரும் பேட்மேன் படங்களில் ஜோக்கராக ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடிக்கப்போவதாக எந்த ஒப்பந்தமும் இதுவரை போடப்படாதது 'ஜோக்கர்' ரசிகர்களுக்கு சோகச் செய்தியாக இருக்கலாம்.
சமூகம் விதித்து வைத்திருக்கும் வரையறைகளின் மீதும், ஒழுங்குகளின் மீதும் எப்போதும் ஏறி நின்று கெக்கலி கொட்டி சிரிக்கும் ஜோக்கர் பாத்திரத்தும் நியாயம் செய்துள்ளது டோட் பிலிப்ஸின் இந்த ‘ஜோக்கர்’.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago